தூத்துக்குடி கடலில் பாதுகாப்பு ஒத்திகை
தூத்துக்குடி கடலில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் படகில் ரோந்து சென்று பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகள் போல் நடித்த 10 பேர் சிக்கினர்.
தூத்துக்குடி கடலில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் படகில் ரோந்து சென்று பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகள் போல் நடித்த 10 பேர் சிக்கினர்.
பாதுகாப்பு ஒத்திகை
கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் கடல்வழியாக நுழைந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து கடலோர பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடலோர பாதுகாப்பு போலீஸ் குழுமம் உருவாக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. கடல்வழி மற்றும் கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக அவ்வப்போது அனைத்து பாதுகாப்பு துறைகளையும் ஒன்றிணைத்து பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இதில் பாதுகாப்பு படை வீரர்கள், போலீசார் தீவிரவாதிகள் போன்று வேடம் அணிந்து முக்கிய இடங்களில் ஊடுருவ முயற்சி செய்வதும், அவர்களை அனைத்து பாதுகாப்பு துறையினரும் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்துவது போன்றும் ஒத்திகை நடத்தப்படுகிறது. ஆபரேசன் ரக்சக், ஆபரேசன் சுரக்சா, ஆபரேசன் பேரிகார்டு, ஆபரேசன் ஹம்லா, ஆபரேசன் சாகர் கவாச் போன்ற பல்வேறு பெயர்களில் ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.
படகில் போலீசார் ரோந்து
அதன்படி, நேற்று காலை முதல் 'சாகர் கவாச்' என்ற பெயரில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கடற்படை, கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு போலீசார், கியூ பிரிவு, மத்திய தொழில் பாதுகாப்பு படை உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும துணை போலீஸ் சூப்பிரண்டு பிரதாபன் தலைமையில், இன்ஸ்பெக்டர் சைரஸ் மற்றும் போலீசார் தூத்துக்குடி கடலில் படலில் ரோந்து சென்று தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது தூத்துக்குடி துறைமுகத்துக்குள் நுழைய முயன்ற தீவிரவாதிகளை பிடிப்பது போன்று ஒத்திகை நடத்தப்பட்டது.
10 பேர் சிக்கினர்
அதாவது, 2 விசைப்படகுகள் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் அருகே சுற்றித்திரிந்தன. கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் உடனடியாக விரைந்து சென்று அந்த படகுகளை மடக்கினர். அப்போது ஒரு படகில் 6 பேரும், மற்றொரு படகில் 4 பேரும் இருந்தனர். தூத்துக்குடி துறைமுகத்தை தாக்குவதற்காக தீவிரவாதிகள் போல் நடித்து வந்த அந்த 10 பேரையும் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இவ்வாறு ஒத்திகை நடத்தப்பட்டது.
இந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று (புதன்கிழமை) இரவு 8 மணி வரை தொடர்ந்து நடக்கிறது. இதனால் அனைத்து பாதுகாப்பு துறையினரும் விழிப்புடன் கண்காணித்து வருகின்றனர்.