காவலாளி மனைவிக்கு ரூ.6½ கோடி வரி பாக்கி என நோட்டீஸ் வந்ததால் பரபரப்பு


காவலாளி மனைவிக்கு ரூ.6½ கோடி வரி பாக்கி என நோட்டீஸ் வந்ததால் பரபரப்பு
x

ஆம்பூரை சேர்ந்த காவலாளி மனைவிக்கு ரூ.6 கோடியே 65 லட்சம் வருமான வரி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை பெயரில் நோட்டீசு வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர்

ஆம்பூர்

ஆம்பூரை சேர்ந்த காவலாளி மனைவிக்கு ரூ.6 கோடியே 65 லட்சம் வருமான வரி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை பெயரில் நோட்டீசு வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காவலாளி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் காதர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் லியாகத் அலி. இவர் தனியார் கம்பெனியில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜாப்ரீன் ஆவுஸ் (வயது 37). இவர்கள் 3 குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

கொரோனா காலத்தில் இவருக்கு ஒரு பெண் அறிமுகமாகியுள்ளார். அந்தப் பெண் மளிகை பொருட்களை இலவசமாக இவருக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் இலவசமாக மளிகை பெற்றவர்கள் ஆதார் கார்டு, வங்கிகணக்கு புத்தக நகல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை இலவசமாக மளிகை பொருட்கள் கொடுத்தவர்களுக்கு கொடுக்க வேண்டும் என கூறி அந்தப் பெண் ஜாப்ரீன் ஆவுஸ்யிடம் இருந்து பெற்று சென்றுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் ஒரு வாரம் கழித்து வங்கிகணக்கு புத்தகம் இருப்பவர்களுக்கு இலவசமாக பான் கார்டு செய்து தருகிறோம் என்றும் உங்கள் மொபைலுக்கு ஓ.டி.பி. எண் வரும் என்று கூறியுள்ளார்.

இதற்கு நம்பிய ஜாப்ரீன் ஆவுஸ், செல்போனுக்கு வந்த ஓ.டி.பி. எண்ணை அந்த பெண்ணிடம் தெரிவித்து உள்ளார்.

அதன்பின் ஒரு மாதம் ஆகியும் ஜாப்ரீன் ஆவுஸ்க்கு பான் கார்டு வரவில்லை. அந்த பெண்ணையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் ஜாப்ரீன் ஆவுஸ்க்கு சில மாதங்களுக்கு முன்பு வருமான வரித்துறை பெயரில் நோட்டீஸ் ஒன்று வந்துள்ளது. அதில் ஜாப்ரீன் ஆவுஸ், 'குளோபல் டிரேடர்ஸ்' என்ற பெயரில் நிறுவனம் நடத்தியதாகவும், ரூ.6 கோடியே 65 லட்சம் வரி செலுத்த வேணடும் என இருந்தது.

போலீசில் புகார்

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஜாப்ரீன் ஆவுஸ் இது குறித்து பலரிடம் ஆலோசனை செய்த பின்னர் நேற்று ஆம்பூர் டவுன் போலீசில் இது குறித்து புகார் அளித்தார்.

சில நாட்களுக்கு முன்பு பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த ஒரு மாற்றுத்திறனாளி மூதாட்டிக்கு ரூ.8 கோடி வரி பாக்கி என்று வருமானவரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.


Next Story