அண்ணாகிராமம் பகுதி விவசாயிகளுக்கு மானிய விலையில் விதை நெல்
அண்ணாகிராமம் பகுதி விவசாயிகளுக்கு மானிய விலையில் விதை நெல் வழங்கப்படுவதாக அதிகாாி தொிவித்துள்ளாா்.
நெல்லிக்குப்பம்,
அண்ணாகிராமம் வட்டாரத்திற்கு சம்பா பட்டத்திற்கான மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி, பொன்மணி (சி.ஆர்.1,009 சப்-1), பி.பி.டி. 5,204, திருச்சி-1 போன்ற நீண்ட கால விதை நெல் ரகங்கள் அண்ணாகிராமம் வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் எனதிரிமங்கலம் சமுதாய கூட கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த நெல் விதைகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வட்டாரத்தில் வடகிழக்கு பருவமழையின் போது வெள்ளத்தால் பாதிக்கப்படும் கிராமங்களான மேல்குமாரமங்கலம், புலவனூர், அவியனூர், பைத்தம்பாடி, எனதிரிமங்கலம், கொரத்தி, அக்கடவல்லி, சோழவல்லி, வான்பாக்கம், முள்ளிகிராம்பட்டு, திருக்கண்டேஸ்வரம், மேல்பாதி, கீழ்பாதி, வைடப்பாக்கம், குடிதாங்கி, எய்தனூர், சுந்தரவாண்டி ஆகிய கிராமங்களில் நீண்ட கால ரகங்களான பொன்மணி(சி.ஆர்.1,009 சப்-1) மற்றும் திருச்சி-1 ஆகிய ரகங்களை விதைப்பு செய்யலாம்.
தண்ணீர் தேங்காத இடங்களில், அதிக தழைச்சத்து தேவைப்படாத விற்பனைக்கு நல்ல வாய்ப்புள்ள சன்ன ரகங்களான மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி மற்றும் பி.பி.டி. 5,204 ரகங்களை தேர்வு செய்து விதைப்பு செய்யலாம். எனவே விவசாயிகள் தங்களுடைய நிலங்களுக்கு தகுந்தாற்போல நெல் ரகங்களை தேர்வு செய்து, விதைப்பு பணிகளை மேற்கொண்டு நல்ல மகசூல் ஈட்டி பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவலை அண்ணாகிராம வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.