சமுதாய நாற்றங்கால் பண்ணையில் விதைகள் நடும்பணி
சமுதாய நாற்றங்கால் பண்ணையில் விதைகள் நடும்பணி
தஞ்சை சிட்கோவில் சமுதாய நாற்றங்கால் பண்ணையில் விதைகள் நடும் பணியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.
சமுதாய நாற்றங்கால் பண்ணை
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை, உழவர் சந்தை எதிரில் அமைந்துள்ள தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி கழகம் (சிட்கோ) வளாகத்தில், மாவட்ட நிர்வாகம், பசுமைக்குழு, கவின்மிகு தஞ்சை இயக்கம் சார்பில் சமுதாய நாற்றங்கால் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சமுதாய நாற்றங்கால் பண்ணைகளில் விதைகள் நடும் பணியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்து விதைகளை நட்டார். இதன் மூலம் தன்னார்வ அமைப்புகளின் பங்களிப்புடன் மரக்கன்றுகள் வளர்த்து அதனைத் தேவையான அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கி தஞ்சை மாவட்டத்தில் மரம் வளர்க்கும் பணியினை தொய்வில்லாமல் தொடர்ந்து நடத்திட இந்த சமுதாய நாற்றங்கால் தோட்டம் உதவும் என கலெக்டர் கூறினார்.
முக்கனி தோட்டம்
தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான சுமார் 10,000 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த பண்ணையில் முதல் கட்டமாக வேம்பு, தேக்கு, புங்கை, இலுப்பை, வாகை, வாதாம், புலி, மருது, பூவரசு, விளாம், நாவல், மா, பலா, நெல்லி போன்ற பல வகையான மரக்கன்றுகள் நடப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும். இதனைத் தொடர்ந்து தஞ்சையில் உள்ள சுற்றுலா விருந்தினர் மாளிகைகளில் மா, பலா, வாழை உள்ளிட்ட முக்கனி தோட்டம் அமைக்கும் பணியினையும் கலெக்டர் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கவின்மிகு தஞ்சை இயக்க தலைவர் டாக்டர்.ராதிகா மைக்கேல், ரெட்கிராஸ் தலைவர் டாக்டர். வரதராஜன், துணைத்தலைவர் முத்துக்குமார், மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர்கள் சிங்காரவேலு, சங்கரநாராயணன், தொழில் வர்த்தக சங்க தலைவர் மாறவர்மன், தொழிலதிபர்கள் முகமது ரபி, சுப்பிரமணியசர்மா, மதர் தெரசா பவுண்டேஷன் தலைவர் சவரிமுத்து, யாகப்பா பள்ளி தாளாளர் எட்வர்ட், தாசில்தார் சக்திவேல் மற்றும் பலர்கலந்து கொண்டனர்.