உரிமம் இல்லாத விதைகளை விற்றால் நடவடிக்கை-அதிகாரி எச்சரிக்கை
கிருஷ்ணகிரி:
உரிமம் இல்லாத விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தர்மபுரி விதை ஆய்வு துணை இயக்குனர் சங்கர் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விதை விற்பனை நிலையங்கள்
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழக அரசால் வழங்கப்பட்ட விதை விற்பனை உரிமம் பெற்று 665 விதை விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது நல்ல மழை பெய்துள்ளதால், விவசாயிகள் பயறு மற்றும் காய் வகை பயிர்களை சாகுபடி செய்ய உள்ளனர்.
விதை விற்பனையாளர்கள் மிகுந்த கவனத்துடன் பருவத்திற்கேற்ற ரகங்களை தேர்வு செய்து, விதைகளை விற்பனை செய்ய வேண்டும். ஆதார நிலையிலோ (வெள்ளை நிற அட்டை), சான்று நிலையிலோ (நீல நிற அட்டை), உண்மை நிலையிலோ (இளம் பச்சை நிறம்) உள்ள விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.
நடவடிக்கை
விதைகள் சான்று இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது. விதை விற்பனை செய்யும் முன் கொள்முதல் பட்டியல், விதை பரிசோதனை அறிக்கை, தமிழ்நாடு அரசால் வழங்கிய ரகத்திற்கான பதிவு சான்று ஆகியவற்றை தவறாமல் தனித் தனி கோப்புகளில் பராமரிக்க வேண்டும். பருவம் தவறிய விதைகளை விற்றாலோ, பைகளை பிரித்து விற்பனை செய்தாலோ, உரிய ஆவணங்களின்றி விற்பனை செய்தாலோ விதை விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயிகள் பருவத்திற்கேற்ற ரகங்களை தேர்வு செய்து பயிரிட வேண்டும். நெல் நாற்றங்காலில் இந்த மாதத்தில் விதைப்பு செய்து நடவு செய்தால், பூ மற்றும் மணிகள் உருவாகும் நேரத்தில் மழை, பனிப் பொழிவு அதிகமாக வருவதால் மகசூல் பாதிக்கும். எனவே நெல் நாற்றங்கால் விடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் வயது முதிர்ந்த நாற்றுகள் நடவு செய்யக்கூடாது.
உரிமம் இல்லாத விதைகள்
விதை விற்பனை உரிமம் இல்லாமல் விதைகள் விற்பனை செய்தால் விதைகள் சட்டம் 1966, விதை விதிகள் 1968 மற்றும் விதைகள் கட்டுப்பாட்டு ஆணை 1983 ஆகிய விதை சட்ட அமலாக்க நடைமுறைப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.