கெட்டுப்போன 12 கிலோ மீன்கள் பறிமுதல்
வேலூர் மீன் மார்க்கெட்டில் 12 கிலோ கெட்டுப்போன மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வேலூர்
வேலூர் மீன் மார்க்கெட்டில் 12 கிலோ கெட்டுப்போன மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதிகாரிகள் சோதனை
கடலில் பிடிக்கப்படும் மீன்களை கெட்டுப்போகாமல் பாதுகாக்க சிலர் பார்மலின் என்ற ரசாயனத்தைப் பயன்படுத்துகின்றனர். இதனால் 15 நாட்கள் அல்லது அதற்கும் மேற்பட்ட நாட்கள்கூட மீன்கள் கெடாமல் இருக்கும். அந்த மீன்களை சாப்பிடும் போது வயிறு சார்ந்த பிரச்சினைகள் மற்றும் பல்வேறு நோய்கள் ஏற்படும். எனவே இந்த ரசாயனத்தை உணவுப் பொருட்களில் பயன்படுத்தக் கூடாது.
தமிழகத்தில் தற்போது மீன் பிடி தடை காலம் உள்ளதால் வேலூர் மீன் மார்க்கெட்டுக்கு கேரளா மற்றும் கர்நாடக பகுதியில் இருந்து மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தொலைவில் இருந்து மீன்கள் கொண்டுவரப்படுவதால் மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்க பார்மலின் ரசாயனம் மீன்களில் தடவப்பட்டு உள்ளதா? என்பது குறித்து சோதனை செய்ய மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார்.
12 கிலோ மீன்கள் பறிமுதல்
அதன் பேரில் வேலூர் மாவட்ட உணவு பொருள் பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரவிச்சந்திரன், கந்தவேல் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் வேலூர் மீன் மார்க்கெட்டில் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது அவர்கள் அங்குள்ள அனைத்து மீன் கடைகளில் உள்ள மீன்களையும் சோதனை செய்தனர்.
இதேபோல மீன் மார்க்கெட்டை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ள சிறிய மீன் கடைகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. ஆய்வில் பார்மலின் தடவப்பட்ட மீன்கள் எதுவும் விற்பனைக்கு வைக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. ஆனால் சில கடைகளில் கெட்டுப்போன மீன் மற்றும் இறால் வைத்திருந்தனர். 12 கிலோ கெட்டுப்போன மீன்கள் மற்றும் இறால்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
இதுபோன்று திடீர் ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.