சென்னையில் இருந்து கடத்தி வந்த 13½ கிலோ கஞ்சா பறிமுதல்


சென்னையில் இருந்து கடத்தி வந்த 13½ கிலோ கஞ்சா பறிமுதல்
x

சென்னையில் இருந்து கடத்தி வந்த 13½ கிலோ கஞ்சாவை மார்த்தாண்டத்தில் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பெண் உள்பட 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

கன்னியாகுமரி

குழித்துறை:

சென்னையில் இருந்து கடத்தி வந்த 13½ கிலோ கஞ்சாவை மார்த்தாண்டத்தில் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பெண் உள்பட 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீசார் ரோந்து

தமிழ்நாட்டில் கஞ்சா கடத்தலை ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதை தொடர்ந்து குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளிலும், அதிரடி சோதனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதன்பேரில் மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் தலைமையில் போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

13½ கிலோ கஞ்சா பறிமுதல்

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் மார்த்தாண்டம் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையில் போலீசார் மார்த்தாண்டம் பகுதிகளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர்.

அவர்கள் மார்த்தாண்டம் ஜங்ஷன் பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் ஒரு வாலிபரும், ஒரு ெபண்ணும் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்தனர். உடனே, அங்கு சென்று விசாரணை நடத்தி அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தனர். அதில், காகித பொட்டலங்களில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 15 கஞ்சா பொட்டலங்களில் 13½ கிலோ கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

பின்னர், போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்கள் 2 பேரையும் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

சென்னையில் இருந்து...

அங்கு இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினார். விசாரணையில் அந்த வாலிபர் மார்த்தாண்டம் அருகே உள்ள கண்ணனூர் பூந்தோப்பு கொசக்குடிவிளையை சேர்ந்த மத்தியாஸ் மகன் ராஜேஸ்வரன்(வயது 25) என்பதும், அந்த பெண் திருவண்ணாமலை மாவட்டம் தொக்கவாடி பகுதியை சேர்ந்த ரகு என்பவரின் மனைவி அஜந்தா(38) என்பதும் தெரியவந்தது.

மேலும், இவர்கள் 2 பேரும் மார்த்தாண்டம் பகுதிகளில் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக சென்னையில் இருந்து கடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

2 பேர் கைது

இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும், இந்த கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உண்டா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story