ரெயிலில் கடத்திய 14 கிலோ கஞ்சா பறிமுதல்
ஜோலார்பேட்டையில் ரெயிலில் கடத்திய 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு செல்லும் சேஷாத்ரி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து நின்றது.
ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை செய்தபோது பயணிகள் பொதுப் பெட்டியின் கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த பையை கைப்பற்றி சோதனை செய்தனர். அப்போது அதில் 7 பண்டல்களில் 14 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. கஞ்சா கடத்திய நபர் குறித்து ரெயில் பெட்டியில் இருந்த பயணிகளிடம் பாதுகாப்பு படை போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். ஆனால் கஞ்சா கடத்திய நபர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
அதைத்தொடர்ந்து கஞ்சாவை கைப்பற்றி வேலூர் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து பாதுகாப்பு படை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.