சரக்கு வாகனத்தில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


சரக்கு வாகனத்தில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

அரகண்டநல்லூரில் சரக்கு வாகனத்தில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்

விழுப்புரம்

ரேஷன் அரிசி கடத்தல்

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாமதி, சப்-இன்ஸ்பெக்டர் கவியரசன் மற்றும் போலீசார் நேற்று மாலை அரகண்டநல்லூர் ரெயில்வே கேட் அருகில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்தனர். போலீசாரை பார்த்ததும் சரக்கு வாகனத்தை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு அதன் டிரைவர் கீழே இறங்கி தப்பி ஓடி விட்டார். பின்னர் அந்த சரக்கு வாகனத்தை போலீசார் சோதனை செய்ததில் அந்த வாகனத்தினுள் 50 கிலோ எடை கொண்ட 30 சாக்கு மூட்டைகளில் 1,500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பறிமுதல்

விசாரணையில், இந்த ரேஷன் அரிசியை அரகண்டநல்லூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி அதை அரவை மில்லில் கொடுத்து அரைத்து சுற்றுவட்டாரத்தில் உள்ள கோழிப்பண்ணைக்கும் மற்றும் மாட்டுத்தீவனத்திற்கு பயன்படுத்துவதற்கும் கடத்திச் செல்ல இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த ரேஷன் அரிசி மூட்டைகளையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story