25 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
திருப்பரங்குன்றத்தில் லாரியுடன் மூடை, மூடையாக கடத்தப்பட்ட 25 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வியாபாரி, டிரைவர் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றத்தில் லாரியுடன் மூடை, மூடையாக கடத்தப்பட்ட 25 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வியாபாரி, டிரைவர் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
லாரியுடன் ரேஷன் அரிசி பதுக்கல்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்-அவனியாபுரம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் குடோனில் டன் கணக்கில் ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்ட லாரி நிற்பதாக குடிமைப்பொருள் வழங்கல் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேலும் அந்த குடோனில் கடத்தல் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு வெளிமாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அதில் மூடை, மூடையாக ரேஷன் அரிசியுடன் ஒரு லாரி நிற்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
வியாபாரி உள்பட 12 பேர் கைது
இந்த நிலையில் போலீசாரை கண்டதும் குடோனில் இருந்து தப்பி ஓட முயன்ற ரேஷன் அரிசி கடத்தல் வியாபாரி மதுரை சிந்தாமணியை சேர்ந்த முத்துவை(வயது 40) சுற்றி வளைத்து பிடித்தனர்.மேலும் லாரி டிரைவர் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆகிய 12 பேரை கைதுசெய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மதுரை, திருப்பரங்குன்றம், திருநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்களிடம் ரேஷன் அரிசியை விலைகொடுத்து வாங்கி நாமக்கல், ஈரோடு, கரூர், திருப்பூர் மற்றும் கேரளா பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் உள்ள கோழிகளுக்கு தீவனத்திற்கு விற்கப்படுவது தெரியவந்தது. 25 டன் ரேஷன் அரிசி மூடைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.