லாரியில் கடத்திய 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
விருதுநகரில் லாரியில் கடத்திய 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
விருதுநகர் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பின் பிரிஜிட் மேரி தலைமையிலான போலீசார், சிவகாசி ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் தலா 50 கிலோ எடை கொண்ட 61 மூடைகளில் 3 டன் ரேஷன் அரிசி இருந்தது.இதனை தொடர்ந்து போலீசார், ரேஷன் அரிசி மூடைகளை மினிலாரியுடன் பறிமுதல் செய்தனர். லாரி உரிமையாளர் மற்றும் டிரைவருமான மதுரை முனிச்சாலையை சேர்ந்த பாண்டியராஜ் (வயது 29), கிளீனர் மதுரை அவனியாபுரம் பராசக்தி நகரை சேர்ந்த பூவலிங்கம் (29) என்பவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில், சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டி புதுவை நகரை சேர்ந்த ஜான் ராஜா (29) என்பவரிடம் இருந்து ரேஷன் அரிசி மூடைகளை வாங்கி வருவதாகவும், மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த ஸ்டாலின் என்பவருக்காக ரேஷன் அரிசி மூடைகளை கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பாண்டியராஜன், பூவலிங்கம், ஜான் ராஜா, ஸ்டாலின் ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இதில் பூவலிங்கம், பாண்டியராஜன், ஜான் ராஜா ஆகியோரை கைது செய்தனர். ஸ்டாலினை தேடி வருகின்றனர். இந்நிலையில் சிவகாசியிலிருந்து ரேஷன் அரிசி மூடைகளுடன் வந்த மற்றொரு மினி லாரி மதுரையில் பிடிபட்டதாக கூறப்படுகிறது.