பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டவுன் ரேஷன் அரிசி பறிமுதல்
கரூர் வெங்கமேடு பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டவுன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன.
குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை திருச்சி சரக போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா உத்தரவின் பேரில் கரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுதர்சன் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் வெங்கமேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின்பேரில், வெங்கமேடு பகுதிக்குட்பட்ட பசுபதி தெரு கடைசியில் உள்ள கிணற்றின் அருகே இருந்த மோட்டார் அறை மற்றும் அருகில் நின்றிருந்த ஆம்னி வேனை போலீசார் சோதனை செய்தனர்.அப்போது மோட்டார் அறையில் 2½ டன் மற்றும் ஆன்மி வேனில் ½ டன் என மொத்தம் 3 டன் ரேஷன் அரிசி விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 டன் அரிசியுடன், அந்த ஆம்னி வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், ரேஷன் அரியை பதுக்கியது யார்? என்று போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.