போலி ஆவணங்களுடன் இயக்கப்பட்ட கார் பறிமுதல்
போலி ஆவணங்களுடன் இயக்கப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது.
பொன்மலைப்பட்டி:
திருச்சி அரியமங்கலத்தில் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் காமராஜ் நகர் அருகில் நேற்று முன்தினம் குடியரசு தினத்தை முன்னிட்டு மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா உத்தரவின்படி வாகன சோதனை நடைபெற்றது. இதில் அரியமங்கலம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சென்னையில் இருந்து திருச்சியை அடுத்த துவாக்குடி நோக்கி வந்த ஒரு காரை சந்தேகத்தின் பேரில் மறித்து, அதில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த காரை ஓட்டி வந்தவர் சென்னை ஊரப்பாக்கத்தை சேர்ந்த பார்த்திபன் என்பது தெரியவந்தது.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அந்த காருக்கு போலியான ஆவணங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த காரில் வக்கீல்கள் பயன்படுத்தும் சின்னம் இடம்பெற்ற ஸ்டிக்கரும், போலீசார் பயன்படுத்தும் ஸ்டிக்கரும் ேபாலியாக ஒட்டப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த காரின் உரிமையாளரான சென்னை ஊரப்பாக்கம் சுவாமி விவேகானந்தர் நகரை சேர்ந்த சதீஷ்குமாரை(32), போலீசார் தொடர்பு கொண்டு பேசினர்.
மேலும் அவரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். இதில் போலியான ஆவணம் வைத்து அந்த கார் இயக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து சதீஷ்குமார் மீது அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவானந்தம் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து, சிறையில் அடைத்தார். மேலும் கார் மற்றும் போலியான ஆவணங்களை பறிமுதல் செய்தார்.