பொதுமக்களிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது
தஞ்சை அருகே பொதுமக்களிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர் ஸ்கூட்டரை திருடி வந்த போது தனிப்படை போலீசாரிடம் சிக்கினார்.
தஞ்சை அருகே பொதுமக்களிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர் ஸ்கூட்டரை திருடி வந்த போது தனிப்படை போலீசாரிடம் சிக்கினார்.
செல்போன் பறிப்பு
தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நடந்தும், வாகனங்களில் செல்லும் பொதுமக்களிடம் செல்போன் பறிப்பு சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை பிடிக்குமாறு தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர்.
வாலிபர் சிக்கினார்
இந்த நிலையில் தஞ்சை அருகே ஸ்கூட்டர் ஒன்றில் வந்த ஒரு வாலிபர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை மறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுகா வரதப்பனூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரசாந்த்(வயது 21) என்பதும், அவர் திருப்பனந்தாள் போலீஸ் நிலைய பகுதியில் ஸ்கூட்டர் திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் பிரசாந்த்தை கைது செய்து தஞ்சை தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். மேலும் அவரிடம் இருந்து 7 செல்போன்கள் மற்றும் ஒரு ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட பிரசாந்தை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.