பதிவெண் மாற்றி இயக்கப்பட்ட ஆம்னி பஸ் பறிமுதல்


பதிவெண் மாற்றி இயக்கப்பட்ட ஆம்னி பஸ் பறிமுதல்
x

பதிவெண் மாற்றி இயக்கப்பட்ட ஆம்னி பஸ் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி

துறையூர்:

துறையூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியமூர்த்தி, நேற்று முசிறி பிரிவு சாலையில் உள்ள ரவுண்டானாவில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது நீண்ட நேரமாக சாலையோரமாக நின்று கொண்டிருந்த ஆம்னி பஸ்சில் ஆய்வு செய்தபோது, உரிய ஆவணங்கள் இல்லாததை கண்டறிந்தார். இதையடுத்து அந்த பஸ்சின் டிரைவரை அழைத்து விசாரித்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணான பதிலை அளித்தார். இதையடுத்து மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியமூர்த்தி அந்த பஸ்சை பறிமுதல் செய்து துறையூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றார். இதைத்தொடர்ந்து நடந்த ஆய்வில், அந்த பஸ் புதுச்சேரி பதிவு எண்ணை கொண்டது என்பது தெரியவந்தது. மேலும் தமிழக பதிவெண் கொண்ட பஸ் ஏற்கனவே பயன்படுத்தப்படாமல், உடைத்து வாகன உதிரி பாகங்கள் கடைக்கு விற்றது தெரியவந்தது. இது குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியமூர்த்தி கொடுத்த புகாரின்பேரில் துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், அந்த பஸ்சின் உரிமையாளர் துறையூரில் உள்ள பெரியார் நகரை சேர்ந்த காஜா(வயது 45) என்பதும், இவர் ஏற்கனவே ஆம்னி பஸ் டிரைவராக வேலை செய்து வந்ததும், தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றி மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியமூர்த்தி கூறுகையில், இதுபோன்று துறையூர் பகுதியில் பஸ்கள் மற்றும் மற்ற வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதாக புகார்கள் வந்துள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு வாகனமும் ஆய்வு செய்யப்படும் என்றார்.


Next Story