உரிமம் இன்றி இயக்கினால் கழிவுநீர் வாகனங்கள் பறிமுதல்
விழுப்புரம் நகரில் நகராட்சி உரிமம் இன்றி கழிவுநீர் வாகனங்களை இயக்கினால் பறிமுதல் செய்யப்படும் என்று நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விழுப்புரம்:
விழுப்புரம் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மலக்கசடு கழிவு மேலாண்மை தேசிய கொள்கையின்படி கழிவுநீர் மற்றும் மலக்கசடுகளை வாகனங்கள் மூலம் சுத்தம் செய்தல் போன்ற பணிகளை ஒழுங்குப்படுத்த பல்வேறு நிபந்தனைகளுடன் கூடிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
எனவே விழுப்புரம் நகராட்சியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மட்டுமே கழிவுநீரை அகற்றப்பட வேண்டும். வேறு எந்த இடத்திலோ அல்லது தளத்திலோ மலக்கசடு மற்றும் கழிவுகளை கொட்டுவது கண்டறியப்பட்டால் உரிமங்களின் விதிமுறைகளை மீறியதாக கருதப்படும்.
உரிமம் பெற்ற வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி செயல்படுவதையும், எந்த இடையூறும் இல்லாமல் உறுதி செய்ய வேண்டும். உரிமம் பெற்றவர் கழிவுநீர் வாகனத்தை நல்ல மற்றும் வேலை செய்யக்கூடிய நிலையில் விபத்துகளை தவிர்க்கும் வகையில் பராமரிக்க வேண்டும்.
பறிமுதல் செய்யப்படும்
மேலும் பணியமர்த்தப்பட்ட ஓட்டுனர் மற்றும் தொழிலாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். உரிமம் பெற்றவர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கையால் துப்புரவு செய்பவர் அல்லது யாரேனும் ஒரு நபரை அபாயகரமான முறையில் கழிவுநீர் அல்லது கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய ஈடுபடுத்தக்கூடாது. வாகனங்களின் மூலம் எடுத்துச்செல்லும் கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையத்தில் செலுத்தப்படாமல் பொதுமக்களுக்கு சுகாதார கேடு விளைவிக்கும் வகையில் சாலையோரங்களில் கழிவுநீர் செலுத்தப்பட்டால் முதல் முறைக்கு ரூ.25 ஆயிரமும், 2-வது முறைக்கு ரூ.50 ஆயிரமும் என நகராட்சியின் மூலம் அபராத கட்டணம் விதிப்பதுடன் 3-வது முறைக்கு வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
எனவே விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் தனியார் வாகனங்களின் மூலம் கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள் தகுந்த ஆவணங்களுடன் ரூ.2 ஆயிரத்தை நகராட்சி அலுவலகத்தில் செலுத்தி விண்ணப்பம் செய்து கழிவுநீர் அகற்றும் வாகனத்திற்கான உரிமத்தை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சட்டப்படி நடவடிக்கை
உரிமமின்றி இயங்கும் வாகனங்கள் கண்டறியப்பட்டால் முன்அறிவிப்பின்றி வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். வாகன உரிமையாளர்கள் மீது நீதிமன்றம் மூலமாக வழக்குப்பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆகவே பொதுமக்கள், தங்கள் இல்லங்களில் உள்ள கழிவுகளை அகற்ற நகராட்சியில் உரிமம் பெற்ற கழிவுநீர் வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.