மண் அள்ளிய 2 லாரிகள் பறிமுதல்
மாரண்டஅள்ளியில் அனுமதியின்றி மண் அள்ளிய 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மாரண்டஅள்ளி:
மாரண்டஅள்ளியில் அரசு புறம்போக்கு நிலத்தில் அனுமதியின்றி மண் அள்ளுவதாக தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் வந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் சாந்தி வருவாய்த்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் பாலக்கோடு தாசில்தார் ராஜசேகரன் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது பொக்லைன் எந்திரம் மூலம் 2 டிப்பர் லாரிகளில் மண் அள்ளி கடத்துவது தெரியவந்தது. அலுவலர்களை பார்த்ததும் டிரைவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இது குறித்து வருவாய்த்துறையினர் விசாரணை நடத்திய போது லாரி உரிமையாளர் மல்லாபுரத்தை சேர்ந்த ரவி என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 லாரிகளையும் வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தாசில்தார் கொடுத்த புகாரின் பேரில் மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி உரிமையாளர் மற்றும் தப்பி ஓடிய டிரைவர்கள் ஆகியோர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.