மேலூரில் முத்திரையிடாத தராசுகள், படிக்கற்கள் பறிமுதல்- தொழிலாளர் துறை நடவடிக்கை
மேலூரில் முத்திரையிடாத தராசுகள், படிக்கற்களை தொழிலாளர் துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலூரில் முத்திரையிடாத தராசுகள், படிக்கற்களை தொழிலாளர் துறையினர் பறிமுதல் செய்தனர்.
ஆய்வு
தமிழக தொழிலாளர் கமிஷனர் அதுல்ஆனந்த் உத்தரவின் பேரில், மதுரை மண்டல தொழிலாளர் கூடுதல் கமிஷனர் குமரன், இணை கமிஷனர் சுப்பிரமணியன் ஆகியோர் ஆலோசனையின் பேரில், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு புகார் மனுக்களின் அடிப்படையில், மதுரை தொழிலாளர் துறையினர் மேலூர் பகுதிகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அமலாக்கப்பிரிவு உதவி கமிஷனர் மைவிழிச்செல்வி தலைமையிலான தொழிலாளர் துறையினர் மேலூர்-திருச்சி மெயின்ரோடு, செக்கடி, தினசரி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் சட்டமுறை எடையளவு சட்டத்தின் படி தராசுகள், படிக்கற்கள், நிறுத்தல் அளவைகள் ஆகியன குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
தராசுகள் பறிமுதல்
அப்போது, முத்திரையிடாமல் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட எலெக்ட்ரானிக் தராசுகள் 18, மேஜைத்தராசுகள் 24, விட்டத்தராசுகள் 2, இரும்பு படிக்கற்கள் 35, உழக்குகள் 15, ஊற்றல் அளவை 1 என மொத்தம் 95 எடையளவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன், மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு பொட்டல பொருட்கள் விற்பனை செய்த 2 கடைகள் கண்டறியப்பட்டது. இவர்கள் மீது, முத்திரையிடாத மற்றும் தரமற்ற எடையளவுகளை பயன்படுத்துதல், எடைகுறைவு, அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்வது உள்ளிட்ட நுகர்வோர் நலனை பாதிக்கும் வகையில் செயல்பட்டதற்காக வணிகர்களுக்கு முதல் முறை எனில் அபராதமும், தொடர்ச்சியான தவறு எனில், கோர்ட்டு நடவடிக்கையும் எடுக்கப்பட உள்ளது. தற்போது ஆன்லைன் மூலம் தராசுகள், படிக்கற்களை முத்திரையிட விண்ணப்பம் பதிவு செய்து வணிகர்களின் இடத்திற்கே வந்து சிறப்பு முகாம் மூலம் முத்திரையிடப்படுகிறது. இந்த எளிதான வாய்ப்பை வணிகர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.