கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்
உரிமம் இல்லாமல் இயங்கும் கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபடும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) அசோக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உரிமம் இல்லாமல் இயங்கும் கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபடும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) அசோக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாகனம் பறிமுதல்
சேலம் மாநகராட்சி பகுதியில், முறையான உரிமம் இல்லாமல் கழிவுநீர் அகற்றும் பணிகளில் ஈடுபடுகின்றன. இந்த வாகனங்களை பறிமுதல் செய்ய அலுவலர்களுக்கு ஆணையாளர் (பொறுப்பு) அசோக்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து மாநகர் நல அலுவலர் யோகனந் அஸ்தம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட தோப்புக்காடு பகுதியில் இயங்கி வந்த கழிவுநீர் அகற்றும் தனியார் வாகனத்தின் ஆவணங்களை ஆய்வு செய்தார்.
அப்போது முறையான உரிமம் பெறாமல் கழிவுநீர் அகற்றும் பணியில் அந்த வாகனம் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, வாகன உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
எச்சரிக்கை
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) அசோக்குமாரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், வணிக நிறுவனங்களில் மலக்கசடு மற்றும் கழிவுநீர் அகற்றும் பணிகளுக்கு மாநகராட்சியில் முறையான உரிமம் பெற்ற வாகனங்களை மட்டுமே இயக்க வேண்டும். அதேபோன்று குடியிருப்புகள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரி நிறுவனங்கள், வணிக வளாக உரிமையாளர்கள் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்தல், கழிவுநீர் அகற்றுதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும் போது பாதுகாப்பற்ற முறையில் தற்காப்பு கவசம் ஏதுமின்றி தொழிலாளர்களை ஈடுபடுத்த கூடாது.
வடிவமைக்கப்பட்டுள்ள வாகனங்கள், எந்திரங்களின் உதவியுடன் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்த பணியாளர்களை கொண்டே பணிகளை மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமலோ, மாநகராட்சி அனுமதி பெறாமலோ இயங்கும் வாகனங்கள் பறிமுதல் செய்து, சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
பயிற்சி
பாதுகாப்பற்ற முறையில் செப்டிக் டேங்குகள் சுத்தம் செய்யும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தும் போது, கழிவுகளில் இருந்து வெளியேறும் மீத்தேன் வாயு தாக்குவதால் ஏற்படும் உயிர் இழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வானங்களுக்கு எளிய முறையில் உரிமம் வழங்கி, கழிவு நீர் அகற்றும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் பாதுகாப்பான முறையில் எவ்வாறு இந்த பணியில் ஈடுபடுவது என்பது குறித்து மாநகராட்சி சார்பில் பயிற்சி அளிக்கின்றோம். இவ்வாறு அவர் கூறினார்.