இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணிக்கு தேர்வு


இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணிக்கு தேர்வு
x
தினத்தந்தி 13 Jan 2023 12:15 AM IST (Updated: 13 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணிக்கு தேர்வு

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு செல்வபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்பவரது மகன் பிரவீன் (வயது 17). இவர் கோத்தகிரியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-௧ படித்து வருகிறார். சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்த இவர் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வருகிறார். இவரது தாயார் ஜெயலட்சுமி தேயிலைப் பறிக்கும் கூலித் தொழிலாளி ஆவார். பிரவீனுக்கு சிறு வயது முதலே கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் அதிகம் இருந்தது. இதையடுத்து விளையாட்டுத் துறையில் சாதிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் அவர் கிரிக்கெட் பயிற்சியாளர்கள் இமானுவேல், செந்தில்குமார் ஆகியோரிடம் சிறப்பு பயிற்சி பெற்று மாவட்ட, மாநில அணிகளில் தேர்வு பெற்று போட்டிகளில் பங்கேற்று சிறப்பாக விளையாடி வந்தார். இந்தநிலையில் கடந்த அக்டோபர் மாதம் சேலம் மாவட்டத்தில் நடந்த ஜூனியர் கிரிக்கெட் தகுதிச் சுற்று போட்டிகளில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் தேர்வாகினர். இதில் கோத்தகிரியைச் சேர்ந்த பிரவீனும் பங்கேற்று தேசிய அணிக்கு தேர்வு பெற்று சாதனைப் படைத்தார். இவர் வருகிற மே மாதம் வங்கதேசம் மற்றும் இலங்கை நாடுகளில் நடைபெறவுள்ள சர்வதேச ஜூனியர் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய அணிக்கு தேர்வு பெற்றுள்ள பிரவீனை இப்பகுதி மக்களும், விளையாட்டு ஆர்வலர்களும் பாராட்டி ஊக்குவித்து வருகின்றனர். இது குறித்து கிரிக்கெட் வீரர் பிரவீன் தெரிவிக்கையில், இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவாகும். அதற்காக நான் மேற்கொண்ட கடினமான பயிற்சியின் பலனாக இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு பயிற்சி பெறுவதிலும், போட்டிகளுக்கு சென்று வரவும் போதிய பொருளாதார வசதியின்றி சிரமப்பட்டு வருகிறேன். எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், பொதுநல அமைப்புகளும் எனக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்தால் எனது முழு திறமையையும் காண்பித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்து தருவேன் என்று தெரிவித்தார்.


Next Story