போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு 25-ந் தேதி எழுத்து தேர்வு
நெல்லை மாவட்டத்தில் 25-ந் தேதி 7,918 பேர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை எழுதுகிறார்கள்.
நெல்லை மாவட்டத்தில் 25-ந் தேதி 7,918 பேர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை எழுதுகிறார்கள்.
எழுத்து தேர்வு
தமிழகத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் 444 நிரப்புவதற்கான எழுத்து தேர்வு 25-ந் தேதி(சனிக்கிழமை) தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடக்கிறது.
நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்வை 7,918 பேர் எழுதுகிறார்கள். இதற்காக 10 இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் 800 பேரும், அரசு பொறியியல் கல்லூரியில் 800 பேரும், புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளியில் 1,000 பேரும், வி.எம்.சத்திரம் ரோஸ்மேரி மெட்ரிகுலேஷன் பள்ளியில் 500 பேரும், சங்கர்நகர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 929 பேரும், பாளையங்கோட்டை ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளியில் 1,000 பேரும், சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் 600 பேரும், கதீட்ரல் மேல்நிலைப்பள்ளியில் 500 பேரும் தேர்வு எழுதுகிறார்கள்.
7,918 பேர்
பெண் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் சாராள் தக்கர் கல்லூரியில் 1,000 பேரும், சாராள் தக்கர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 789 பேரும் ஆக மொத்தம் நெல்லை மாவட்டத்தில் 7,918 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.
இந்த தேர்வில் கலந்து கொள்பவர்கள் தேர்வு மையத்திற்கு அழைப்பு கடிதம், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, ஊதா அல்லது கருப்பு நிற பந்துமுனை பேனா ஆகியவற்றை மட்டுமே எடுத்துச்செல்ல வேண்டும். செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் தொடர்பான எந்த பொருட்களும் கொண்டு செல்ல அனுமதி கிடையாது.
தேர்வுக்கான ஏற்பாடுகளை நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் அதிகாரிகள் செய்து உள்ளனர்.