ஆறுமுகநேரியில் ஆட்டுசந்தை, ஆம்னி பஸ் நிறுத்துமிடம் தேர்வு
ஆறுமுகநேரியில் ஆட்டுசந்தை, ஆம்னி பஸ் நிறுத்துமிடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்திற்கு எதிரே இருந்த 15 அடி ஆழ பள்ளத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குப்பை மேடு இருந்தது. இந்த குப்பை மேட்டை அகற்ற வேண்டும் என்று பொதுமக்களும், பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், சிறப்பு நிலை பேரூராட்சி தலைவராக கலாவதி கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் கல்யாணசுந்தரம் ஆகியோர் பதவி ஏற்றபிறகு அந்த குப்பை மேட்டை அகற்ற முடிவு செய்தனர். அதன்படி, ரூ.1.40 கோடியில் அந்த பள்ளத்தில் கிடந்த பல நூறு டன் குப்பைகளை தரம் பிரித்து அகற்றப்பட்டது.
தற்போது அந்த குப்பை மேடு சமதளப்படுத்தப்பட்டு, அதில் ஆறுமுகநேரி சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் ஆட்டுச்சந்தையும், மாலை நேரங்களில் சென்னை, கோவை, பெங்களூர் நகரங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்சுகள் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வசதியாக ஆம்னி பஸ் நிறுத்துமிடமும் அமைக்க சிறப்பு நிலை பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதை தொடர்ந்து அந்த இடத்தை கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுரையின்படி நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வில்லியம் ஜேசுதாஸ் ஆய்வு செய்தார். அவருடன் துணைத் தலைவர், நிர்வாக அதிகாரி கணேசன், நகர பஞ்சாயத்து பொறியாளர் ஆவுடை பாண்டி, கவுன்சிலர் வெங்கடேசன், மேற்பார்வையாளர் கார்த்திக் ஆகியோர் இருந்தனர்.