அரசு மருத்துவமனை அமைக்க இடம் தேர்வு
கண்டாச்சிபுரத்தில் அரசு மருத்துவமனை அமைக்க இடம் தேர்வு செய்ய ஆய்வு செய்யப்பட்டது.
கண்டாச்சிபுரம்:
கண்டாச்சிபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இதை தாலுகா அரசு மருத்துவமனையாக அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அதன்படி திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடியும் தாலுகா அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று கலெக்டர் மோகனிடம் மனு அளித்துள்ளார். இதையடுத்து கண்டாச்சிபுரத்தில் அரசு மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
முதற்கட்டமாக அரசு மருத்துவமனைக்கு இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது. விழுப்புரம் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மணிமேகலை தலைமையில் பொதுப்பணித்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பொறியாளர் ராஜவேலு, முகையூர் வடக்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான ரவிச்சந்திரன் ஆகியோர் கண்டாச்சிபுரத்தில்
புதிதாக தாலுகா அரசு மருத்துவமனை அமைக்க இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் இளஞ்செழியன், ஊராட்சி மன்ற தலைவர் ஶ்ரீதேவி ரவிக்குமார், ஒன்றிய கவுன்சிலர் மீனாகுமாரி ஏழுமலை, துணை தலைவர் ஜீவானந்தம், கிளை செயலாளர்கள் தேவசேனாதிபதி, செல்லபெருமாள், ஏழுமலை, ஜெய்சங்கர் மற்றும் வருவாய் அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.