1 கிலோ தக்காளி ரூ.30-க்கு விற்பனை


1 கிலோ தக்காளி ரூ.30-க்கு விற்பனை
x
தினத்தந்தி 13 Aug 2023 12:30 AM IST (Updated: 13 Aug 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மார்க்கெட்டில் 1 கிலோ தக்காளி நேற்று ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மார்க்கெட்டில் 1 கிலோ தக்காளி நேற்று ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தூத்துக்குடி மார்க்கெட்

தூத்துக்குடி மார்க்கெட்டிற்கு தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் மற்றும் வட மாநிலங்களில் இருந்து காய்கறிகள் அதிக அளவில் விற்பனைக்காக கொண்டு வரப்படும். ஆனால் இந்த ஆண்டு வெளி மாநிலங்களில் இருந்து தூத்துக்குடிக்கு காய்கறிகள் வராததால் கடந்த சில மாதங்களாக காய்கறிகளின் விலை அதிகரித்து காணப்பட்டது. தக்காளி 1 கிலோ ரூ.120 மேல் விற்பனையானது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நியாயவிலை கடைகளில் தக்காளியை ரூ.60-க்கு விற்பனை செய்தது. இருந்தாலும் தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே சென்றது.

விலை குறைந்தது

இந்த நிலையில் கடந்த வாரம் முதல் தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டிற்கு பாவூர்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தக்காளிகள் மற்றும் காய்கறிகள் அதிகளவில் வரத்தொடங்கியது. இதனால் அவற்றின் விலையும் குறைய தொடங்கியது. இதன் காரணமாக நேற்று தூத்துக்குடி மார்க்கெட்டில் தக்காளி 1 கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டது. இதுபோல் கத்திரிக்காய் ரூ.20-க்கும், கேரட் ரூ.30-க்கும், அவரைக்காய் ரூ.30-க்கும், இஞ்சி பழையது ரூ.240-க்கும், புதிய இஞ்சி ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி உள்ளிட்ட காய்கறி விலை குறைய தொடங்கியதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Next Story