கரூர் ரெயில் நிலையத்தில் வாழைப்பழ பொருட்கள் விற்பனை
கரூர் ரெயில் நிலையத்தில் வாழைப்பழ பொருட்கள் விற்பனை நடந்தது.
ஒரு ரெயில் நிலையம் ஒரு பொருள் என்ற திட்டத்தின் கீழ் அந்தந்த பகுதிகளில் பிரபலமான பொருட்கள் ரெயில் நிலையத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் கரூர் ரெயில் நிலையத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு முருங்கை மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்பட்ட முருங்கை இலை மற்றும் முருங்கைக்காய் சூப் பவுடர், முருங்கை இலை சாதப்பொடி, இட்லி பொடி, முருங்கை இலை லட்டு உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. தற்போது கரூர் மாவட்டத்தில் விளைச்சல் அதிகமாக உள்ள வாழைப்பழம் மற்றும் வாழைப்பழத்தில் இருந்து தயாரிக்கப்படும் பல்வேறு பொருட்களின் விற்பனை தொடங்கியுள்ளது.
வாழைப்பழத்தை பொறுத்தவரை எளிதாக கிடைக்கக்கூடியதாகவும், அதிக மக்கள் சாப்பிடும் பழமாகவும் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு, ரத்தத்தில் வெள்ளை அணுக்களை மேம்படுத்துதல், ஏ, சி, பி6 என பல்வேறு வைட்டமின் சத்துக்கள் நிறைந்த பல்வேறு வகையான வாழைப்பழங்கள் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்பட்ட வாழைப்பழ பவுடர், டிரை புரூட்ஸ், பிஸ்கட், நூடுல்ஸ், வாழைப்பழ ஜூஸ் என பல்வேறு பொருட்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. இதனை கரூர் ரெயில் நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.