திருவாரூர் கடைவீதியில் கரும்பு விற்பனை


திருவாரூர் கடைவீதியில் கரும்பு விற்பனை
x

பொங்கல் பண்டிகையையொட்டி திருவாரூர் கடைவீதியில் கரும்பு விற்பனைக்கு வந்தது. மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

திருவாரூர்

பொங்கல் பண்டிகையையொட்டி திருவாரூர் கடைவீதியில் கரும்பு விற்பனைக்கு வந்தது. மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

பொங்கல் பண்டிகை

தமிழர்கள் கொண்டாடும் பண்டிகையில் பொங்கல் பண்டிகை மிகவும் சிறப்புமிக்கது. பொங்கல் பண்டிகை வருகின்ற 15-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையில் கரும்பு முக்கிய இடத்தை பிடிக்கிறது. எவ்வளவு விலை விற்றாலும் கரும்பை யாரும் வங்காமல் செல்வதில்லை.

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் சென்ற ஆண்டு கரும்பு வழங்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டு கரும்பு உற்பத்தி தமிழகம் முழுவதும் அதிகமாக பயிரிடப்பட்டது.

பரிசு தொகுப்பு

இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை ஏற்று கரும்பும் இடம் பெற்றது. இதனையடுத்து பொங்கல் பரிசு தொகுப்பு 9-ந்தேதி (திங்கட்கிழமை)முதல் வழங்க உள்ள நிலையில் பரிசு தொகுப்பில் வழங்குவதற்காக கரும்புகளை அரசே கொள்முதல் செய்து வருகிறது. கரும்பு விளைச்சல் அதிகரித்துள்ளதால் கரும்பு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இல்லாததால், அதன் விலையும் உயர வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.

கரும்பு விற்பனை தொடங்கியது

திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி பகுதியில் கரும்பு அதிகமாக பயிரிடப்படுகிறது. தற்போது கரும்பு அறுவடைகள் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கரும்புகள் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

அதன்படி திருவாரூர் கடைவீதிக்கு கரும்பு விற்பனைக்கு வந்துள்ளது. ஒரு கட்டு கரும்பு ரூ.220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.புதிய ஆண்டில் நல்லது நடக்கும் என நம்பிக்கையில் மகிழ்ச்சியுடன் வரவேற்று தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாட அனைவரும் தயாராகி வருகின்றனர்.

ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்

இதுகுறித்து கரும்பு வியாபாரி லெட்சுமி கூறுகையில், மன்னார்குடி பகுதியில் இருந்து கரும்பு விற்பனைக்கு வந்துள்ளது. கரும்பு ஒரு கட்டு ரூ.220 விற்பனை செய்யப்படுகிறது. சில்லறையில் ஒரு கரும்பு ரூ.25-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் சீர்வரிசைக்காகவும், வீட்டின் குழந்தைகள் ருசித்து சாப்பிடுவதற்கானவும் மக்கள் ஆர்வத்துடன் கரும்பை வாங்கி செல்கின்றனர். இந்த ஆண்டு விளைச்சல் அதிகமாக இருப்பதால் கரும்பு விலை பெரிதாக விலை ஏற்றம் இருக்காது என்றார்.


Next Story