செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
காணை செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே காணை மெயின்ரோட்டில் பிரசித்தி பெற்ற செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, கோவிலின் மகா கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் மாலை மங்கள இசை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, வாஸ்துசாந்தி, பிரவேச பலி, ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், முதல்கால யாகசாலை பூஜைகளும், இரவு 9 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதலும் நடந்தது.
இதனை தொடர்ந்து நேற்று கும்பாபிஷேக விழாவையொட்டி காலை 6.30 மணியளவில் மங்கள இசை, கோ பூஜை, வேதிகா பூஜை, நாடி சந்தானம், 2-ம் கால யாகசாலை பூஜைகளும், 9 மணிக்கு மகா பூர்ணாகுதியுடன் சங்கீத உபசாரமும் நடைபெற்றது.
அபிஷேகம்
அதன் பின்னர் 9.20 மணிக்கு கடம் புறப்பாடாகி 9.45 மணியளவில் செல்வ விநாயகர் கோவிலின் விமான கோபுர கலசம் மற்றும் பரிவார தெய்வங்களான நாகேஸ்வரர், பாலாம்பிகை, பாலமுருகன் சன்னதிகளின் விமான கோபுர கலசத்திற்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, காலை 10 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் காணை மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை காணை கிராம மக்கள் செய்திருந்தனர்.