சேமங்கி மாரியம்மன் கோவில் தேரோட்டம்
சேமங்கி மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவிழா
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே சேமங்கியில் 18 பட்டி கிராம மக்களுக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தேர் திருவிழா கடந்த 23-ந்தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சி மற்றும் கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
தொடர்ந்து தினமும் பக்தர்கள் கம்பத்திற்கு புனிதநீர் ஊற்றி வந்தனர். கடந்த 7-ந்தேதி வடிசோறு நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்றுமுன்தினம் காலை மாரியம்மனுக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
ேதரோட்டம்
மாலையில் பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு வாண வேடிக்கை நடைபெற்றது.
அனைத்தொடர்ந்து டிராக்டரில் உற்சவர் மாரியம்மன் அலங்கரிக்கப்பட்டிருந்த தேரில் எழுந்தருளினார். ெதாடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக தேர் வந்து நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று காலை கிடா வெட்டு பூஜையும், மதியம் காப்பு அவிழ்த்தல், மாலையில் கம்பம் பிடுங்கி காவிரி ஆற்றில் விடுதல், இரவு தர்மகர்த்தா அழைத்தல், அம்மன் ஊஞ்சல் ஆடுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இன்று (வியாழக்கிழமை) செல்லாண்டியம்மன், மாரியம்மன் சிறப்பு அலங்காரத்துடன் ஊர்வலமாக நொய்யல் செல்லாண்டியம்மன் கோவிலுக்கு புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சியும், தொடர்ந்து மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.