தொடர் மழையால் சேதமடைந்த தொகுப்பு வீடுகள்


தொடர் மழையால் சேதமடைந்த தொகுப்பு வீடுகள்
x

காவிரி பூம்பட்டினம் ஊராட்சியில் தொடர் மழையால் தொகுப்பு வீடுகள் சேதமடைந்துள்ளதால் புதிதாக கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

காவிரி பூம்பட்டினம் ஊராட்சியில் தொடர் மழையால் தொகுப்பு வீடுகள் சேதமடைந்துள்ளதால் புதிதாக கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொகுப்பு வீடுகள்

சீர்காழி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட காவிரி பூம்பட்டினம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்குட்பட்ட பூம்புகார் மீனவர் காலனி, கீழையூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதி, நெய்த வாசல் தென்பாதி மற்றும் வடபாதி ஆகிய கிராமங்களில் அரசால் கட்டித் தரப்பட்ட தொகுப்பு வீடுகள் உள்ளன.

இந்த வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகள் சேதமடைந்து காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் மேலும் இந்த வீடுகள் சேதமடைந்தன.

சுவர்கள் இடிந்து விழுந்தன

வீடுகளின் மேற்கூரை மற்றும் சுவரில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்துள்ளன. சில வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. சில வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அதில் வசித்து வந்த மக்கள் அதன் அருகிலேயே சிறிய கீற்றுக்கொட்டகை அமைத்து வசித்து வருகின்றனர். தற்போது பெய்த மழையால் குடியிருப்புகளை சுற்றித்தண்ணீர் தேங்கியதால் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் சேதமடைந்து காணப்பட்டதால் அதன் அருகிலேயே குடிசை அமைத்து வசித்து வருகிறோம்.

புதிதாக கட்டித்தர வேண்டும்

கடந்த வாரம் பெய்த கனமழையால் பல இடங்களில் தொகுப்பு வீட்டின் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதி இடிந்து விழுந்து சேதம் அடைந்தது. வீடுகள் எப்போது இடிந்து விழும் என அச்சத்துடனே வசித்து வருகிறோம். எனவே பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story