வருமான வரி பிடித்தம் தொடர்பான கருத்தரங்கு
கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வருமான வரி பிடித்தம் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது.
கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், வருமான வரித்துறை சார்பில், ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலாளர்களுக்கான வரி பிடித்தம் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. கணக்குசேவை தணிக்கையாளர் விஜய் தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட கணக்கு அலுவலர் ரமேஷ், உதவித்திட்ட அலுவலர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கே.வி. குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் ஆனந்தி வரவேற்றார்.
வருமானம் பிடித்தம் செய்யும் அலுவலர்களுக்கு, வரி பிடித்தம் தொடர்பான தகவல்களை, காணொலி காட்சி மூலம் வருமான வரித்துறை அலுவலர் தயா.ராம்குமார், ஆய்வாளர் எம்.யுவராஜ் ஆகியோர் விளக்கினர்.
அப்போது, சரியான விகிதத்தில் வருமான வரி பிடித்தம் செய்வதற்கான விதிமுறைகள், வரிப்பிடித்தம் கணக்கீடு செய்யும் வழிமுறைகள், பிடித்தம் செய்த தொகையை குறித்த கால கெடுவுக்குள் மத்திய அரசின் கணக்கில் செலுத்துதல், காலாண்டு படிவங்களை குறித்த நேரத்திற்குள் தாக்கல் செய்தல், வரி பிடித்தம் செய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல் குறித்தும் விளக்கப்பட்டது.