வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி முதல்-அமைச்சருக்கு 10 ஆயிரம் தபால்கள் அனுப்பி வைப்பு


வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி முதல்-அமைச்சருக்கு 10 ஆயிரம் தபால்கள் அனுப்பி வைப்பு
x

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி முதல்-அமைச்சருக்கு 10 ஆயிரம் தபால்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

அரியலூர்

தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பா.ம.க. முன்னாள் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் முதல்-அமைச்சருக்கு தபால் அனுப்பும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி அரியலூர் நகரில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் இருந்து இட ஒதுக்கீடு கடிதங்களை ஜி.கே.மணி பெற்றுக்கொண்டார். கடிதங்கள் அனுப்பும் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களும் கையொப்பமிட்டு ஆதரவு தெரிவித்தனர். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 10 ஆயிரம் தபால்கள் தபால் நிலையத்தின் மூலம் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது அரியலூர் மாவட்ட செயலாளர் காடுவெட்டி ரவி, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் உலக சாமிதுரை, அரியலூர் மாவட்ட தலைவர் சின்னதுரை, பெரம்பலூர் மாவட்ட தலைவர் செந்தில், அரியலூர் மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் தர்ம பிரகாஷ், ஒன்றிய செயலாளர்கள், கிளை செயலாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து ஜி.கே.மணி நிருபர்களிடம் கூறியதாவது:-

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலே முதல்-அமைச்சர் வழங்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் காலாவதியான சுரங்கங்களில் நீரை தேக்கி நீர் மேலாண்மையை காக்க வேண்டும். மதுரை, சேலம், திருவள்ளூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், கடலூர், கோவை உள்ளிட்ட 10 பெரிய மாவட்டங்களை பிரிக்க வேண்டும். இதன் மூலம் அரசின் திட்டங்கள் பொது மக்களை விரைவாக சென்றடையும். அரசு பணி தற்போது ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது. இதில் இடஒதுக்கீட்டை நிறைவேற்ற வேண்டும். கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story