செங்கோட்டை-மயிலாடுதுறை தினசரி ரெயில் போக்குவரத்து
செங்கோட்டை-மயிலாடுதுறை தினசரி ரெயில் போக்குவரத்து தொடங்கியது.
செங்கோட்டை:
செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறைக்கு தினசரி முன்பதிவில்லாத விரைவு ரெயில் 25 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று காலையில் தொடங்கியது. செங்கோட்டை ரெயில் நிலையத்தில் நடந்த தொடக்க விழாவுக்கு கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, கொடி அசைத்து ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். நகர்மன்ற தலைவா் ராமலட்சுமி, துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன், ெரயில் பயணிகள் நலச்சங்க தலைவா் எல்.எம்.முரளி, செயலாளா் கிருஷ்ணன், துணைச்செயலாளா் செந்தில்ஆறுமுகம், அ.தி.மு.க. நகர செயலாளா் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். எஸ்.ஆர்.எம்.யு. சங்க முன்னாள் கிளைத்தலைவா் கல்யாணிபாண்டியன் வரவேற்று பேசினார். இதையடுத்து முன்னாள் நகர்மன்ற தலைவரும், வர்த்தக சங்க தலைவருமான எஸ்.எம்.ரஹீம் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ரெயில் பயணிகள் நலச்சங்க மக்கள் தொடா்பு அலுவலா் ராமன், உறுப்பினா் முரளி, நகர்மன்ற உறுப்பினா்கள் சுப்பிரமணியன், ஜெகன், முத்துப்பாண்டி, மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணைத்தலைவா் ஞானராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இந்த முன்பதிவில்லா விரைவு ரெயிலானது செங்கோட்டையில் தினசரி காலை 7 மணிக்கு புறப்பட்டு தென்காசி, கடையநல்லூர், பாம்புகோவில்சந்தை, சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர், சிவகாசி, திருத்தங்கல், விருதுநகா், கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல்ரோடு, திண்டுக்கல், வையம்பட்டி, மணப்பாறை, திருச்சி, மஞ்சத்திடல், திருவெரும்பூர், பூதலுார், தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், ஆடுதுறை, குத்தாலம், மயிலாடுதுறைக்கு மாலை மணி 5.10-க்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் காலை 11.30 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்படும் ரெயிலானது இரவு 8.30 மணிக்கு செங்கோட்டை வந்தடையும். இந்த ரெயிலுக்கு செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறைக்கு ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.