80 வயதை கடந்த மூத்த வாக்காளர்கள் கவுரவிப்பு


80 வயதை கடந்த மூத்த வாக்காளர்கள் கவுரவிப்பு
x
தினத்தந்தி 2 Oct 2022 12:15 AM IST (Updated: 2 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சர்வதேச முதியோர் தினத்தையொட்டி கிருஷ்ணகிரியில் 80 வயதை கடந்த மூத்த வாக்காளர்களுக்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

கிருஷ்ணகிரி

சர்வதேச முதியோர் தினத்தையொட்டி கிருஷ்ணகிரியில் 80 வயதை கடந்த மூத்த வாக்காளர்களுக்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

கவுரவிக்கும் நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், சர்வதேச முதியோர் தினத்தையொட்டி 80 வயதை கடந்த மூத்த வாக்காளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கி 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். தொடர்ந்து, அவர்களிடம் இந்திய தலைமை தேர்தல் ஆணையரின் கடிதத்தை வழங்கினார். பின்னர் கலெக்டர் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

இது குறித்து கலெக்டர் கூறியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையம் சர்வதேச முதியோர் தினத்தையொட்டி, அக்டோபர் 1-ந் தேதியன்று 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்களை கவுரவிக்க அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மூத்த வாக்காளர்களை வாக்காளர் பதிவு அலுவலர்கள் நேரில் சந்தித்து, அவர்களை கவுரவிக்கும் விதமாக, அவர்களிடம் இந்திய தேர்தல் ஆணையரின் ஆங்கிலம் மற்றும் தமிழில் எழுதிய கடித நகலை வழங்க உள்ளார்.

29,692 மூத்த வாக்காளர்கள்

ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியில் 4,550 வாக்காளர்களும், பர்கூர் தொகுதியில் 4,992 வாக்காளர்களும், கிருஷ்ணகிரி தொகுதியில் 4,081 வாக்காளர்களும், வேப்பனப்பள்ளி தொகுதியில் 4,996 வாக்காளர்களும், ஓசூர் தொகுதியில் 5,260 வாக்காளர்களும், தளி தொகுதியில் 5,813 வாக்காளர்களும் என மாவட்டத்தில் மொத்தம் 29,692 மூத்த வாக்காளர்கள் கண்டறியப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து, இந்திய தேர்தல் ஆணையரின் கடித நகல் வழங்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன், தாட்கோ பொதுமேலாளர் யுவராஜ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, தனி தாசில்தார் (தேர்தல்) ஜெய்சங்கர், கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) ராமச்சந்திரன், கிருஷ்ணகிரி தாசில்தார் சம்பத் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story