நெல்லையில் பரபரப்பு: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; பள்ளி தாளாளர் கைது


நெல்லையில் பரபரப்பு: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; பள்ளி தாளாளர் கைது
x

நெல்லையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி தாளாளர் கைது செய்யப்பட்டார். உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியை உள்பட 2 பேரும் சிக்கினர்.

நெல்லை,

நெல்லை மேலப்பாளையத்தில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பள்ளியில் சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இந்த பள்ளிக்கூடத்தின் தாளாளராக மேலப்பாளையத்தை சேர்ந்த குதுபுதீன் நஜீப் (வயது 47) என்பவர் உள்ளார்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை

குதுபுதீன் நஜீப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் சக மாணவிகளுடன் சேர்ந்து பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

இதனை அறிந்த மாணவிகளின் பெற்றோர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து செல்ல வைத்தனர்.

தாளாளர் கைது

பின்னர் போலீசார் பள்ளி தாளாளர் குதுபுதீன் நஜீப்பிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

இதனையடுத்து அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குதுபுதீன் நஜீப்பை இரவில் கைது செய்தனர்.

தலைமை ஆசிரியையும் சிக்கினார்

மேலும் பாதிக்கப்பட்ட மாணவிகள் ஏற்கனவே பள்ளி தலைமை ஆசிரியையான நெல்லை தச்சநல்லூரை சேர்ந்த காதரம்மாள் பீவியிடம் (58) புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் பள்ளி தாளாளரின் மனைவி முகைதீன் பாத்திமா (39) என்பவருடன் சேர்ந்து மாணவிகளை மிரட்டியதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து போலீசார் பள்ளி தாளாளருக்கு உடந்தையாக செயல்பட்டதாக தலைமை ஆசிரியை காதரம்மாள் பீவி, தாளாளரின் மனைவி முகைதீன் பாத்திமா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.


Next Story