வாலிபரை கொன்று எரித்த சம்பவத்தில் பரபரப்பு திருப்பம்
வாலிபரை கொன்று எரித்த சம்பவத்தில் பரபரப்பு திருப்பம்
அனுப்பர்பாளையம்
திருப்பூரில் வாலிபரை கொலை செய்து அவருடைய உடலை வீட்டிற்குள் புதைத்த பின்னர் மீண்டும் தோண்டி எடுத்து உடல் எரிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வீட்டில் 2 குழந்தைகளோடு கள்ளக்காதலனுடன் தங்கி இருந்த இளம் பெண் எங்கே என்று போலீசார் தேடி வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
எரிந்த நிலையில்உடல்
திருப்பூர் திருமுருகன்பூண்டியை அடுத்த பொங்குபாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் 35 வயது மதிக்க வாலிபரின் உடல் எரிந்த நிலையில் நேற்று முன்தினம் கிடந்தது. இது பற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் எரித்து கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? தெரியவில்லை. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தனர். அப்போது ஆசாமி ஒருவர் மொபட்டில் சாக்கு மூட்டையை கொண்டு வருவதும், பின்னர் சாக்கு மூட்டை இல்லாமல் திரும்பி செல்வதும் பதிவாகி இருந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இந்த நிலையில் வாலிபர் எரிந்து கிடந்த பகுதியில் இருந்து சற்று தொலைவில் செட்டிபாளையம் தியாகிகுமரன் காலனியில் உள்ள வீடுகளை போலீசார் நேற்று சோதனை செய்தனர். அப்போது ஓடுவேயப்பட்ட ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. அந்த வீட்டின் கதவும் திறந்து கிடந்தது. இதையடுத்து போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது புதைக்குழி போன்று புதிய மண் போடப்பட்டிருந்தது.
3 பிணங்கள் புதைப்பா?
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அங்கு 3 பிணங்கள் புதைக்கப்பட்டு இருக்கலாம் என்று போலீஸ் கமிஷனருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கமிஷனர் பிரபாகரன், ஆர்.டி.ஓ. பண்டரிநாதன், போலீஸ் துணை கமிஷனர் அபிநவ்குமார், உதவி கமிஷனர்கள் அனில்குமார், நல்லசிவம் மற்றும் போலீசார் அந்த வீட்டிற்கு வந்தனர். பின்னர் வீட்டிற்குள் சவக்குழி போன்று மண் ேபாடப்பட்டிருந்த பகுதியை போலீசார் தோண்டினர். 4 அடி ஆழம் வரை தோண்டியபோது குழிக்குள் இருந்து செல்போன் ஒன்றும், மனித கைமணிகட்டு சதையும் கிடந்தது. இதனால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். வாலிபரை கொன்று இந்த வீட்டிற்குள் புதைத்த கொலையாளிகள் வீட்டிற்குள் இருந்து கடுமையான நூர்நாற்றம் வீசியதால் குழியை மீண்டும் தோண்டி அந்த உடலை எடுத்து சாக்குப்பையில் போட்டு கட்டி, காட்டுப்பகுதியில் ெகாண்டு சென்று எரித்து இருக்கலாம், அந்த உடலை எடுத்து குழியை மூடும்போது கொலை செய்யப்பட்டவரின் கைமணிக்கட்டு சதை பிய்ந்து விழுந்து இருக்கலாம் என்றும், அவசரத்தில் குழியை மூடும்போது ெகாலையாளியின் செல்போன் குழிக்குள் விழுந்து இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இளம் பெண்ணின் கள்ளக்காதல்
இதையடுத்து அந்த வீட்டில் யார் குடியிருந்தார்கள் என்று போலீசார் விசாரித்தனர். விசாரணையில் கிடைத்த திடுக்கிடும் தகவல் குறித்து போலீசார் கூறியதாவது:
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 40). இவருடைய மனைவி அபிராபி (26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக அபிராமி தனது கணவர் பரமசிவத்தை விட்டு பிரிந்து தனது கள்ளக்காதலன் மணிகண்டன் (35), தனது 2 குழந்தைகள் மற்றும் தாயார் பஞ்ச வர்ணம் ஆகியோருடன் அந்த வீட்டில் வசித்து வந்தது தெரியவந்தது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு அபிராமி தனது 2 குழந்தைகளை அழைத்து க்கொண்டு சென்று விட்டார். அதற்கு மறுநாள் வீட்டில் இருந்த பஞ்ச வர்ணத்தை மற்றொரு ஆசாமி வந்து அழைத்து சென்று விட்டார்.
இதனால் கொலை செய்யப்பட்டது யார்? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே அபிராபியை பிடித்தால்தான் கொலை செய்யப்பட்டது யார்? என்று தெரியவதும். இதையடுத்து அபிராபியை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள். 3 பேரை கொன்று வீட்டிற்குள் புதைத்து விட்டார்கள் என்ற தகவல் பரவியால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
---------------
சாப்பாடு இல்லாமல் தவித்தநாய்
அபிராமி தான் தங்கி இருந்த வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்தார். அந்த வீடு பூட்டப்பட்ட நிலையில் நாய் மட்டும் வீட்டிற்கு வெளியே கட்டிப்போடப்படடிருந்தது. ஆனால் 4 நாட்களா அந்த நாய் ஆகாரம் இல்லாமல் பட்டினி கிடந்தது. இதையடுத்து போலீசார் அந்த நாயை நேற்று மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்தனர்.
-------
தயார் நிலையில் 3 ஆம்புலன்சு
துர்நாற்றம் வீசிய வீட்டில் 3 பேரை கொன்று புதைத்து இருக்கலாம் என்று தகவல் பரவியது. இதையடுடுத்து 3 ஆம்புலன்சு கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் அந்த வீட்டினுள் சென்று அங்குள்ள காலி இடத்தில் புதியதாக மணல் போடப்பட்டுள்ளதாக என்று ஆய்வு செய்தனர். ஆனால் வீட்டிற்குள் ஒரு இடத்தில் மட்டும் புதை இருந்தது. அந்த குழியை தோண்டியபோது மனித கையின் சதை மட்டும் கிடந்தது.
-----