பெண்கள்-குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு


பெண்கள்-குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு
x

பெண்கள்-குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின் பேரில் வடக்கு மாதவி கிராம பொதுமக்களுக்கு போலீசார் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மருதமுத்து மற்றும் ஒன் ஸ்டாப் சென்டர் உறுப்பினர் ஷீபா ஆகியோர் பொதுமக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் அவர்கள் ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைபேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் இலவச உதவி எண் 14417 குறித்தும், காவல் உதவி செயலி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் பொதுமக்களிடம் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவர இருக்கும் நிலையில் மதிப்பெண் குறைந்து விட்டது என்றோ அல்லது தேர்வில் தோல்வியடைந்து விட்டாலோ தங்களது பிள்ளைகளை கடிந்து கொள்ள வேண்டாம் எனவும், அவர்களை மனதளவில் வலிமைப்படுத்துவதே உங்களது தலையாய கடமை எனவும் அறிவுரை வழங்கினர். வானிலை மாற்றத்தினால் மழை பெய்து வரும் நிலையில் இடி, மின்னல் சமயங்களில் மரத்தடியில் நிற்பதை முற்றிலும் தவிர்த்து விடுமாறும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை காலம் என்பதால், அவர்கள் வீட்டில் இருக்கும் பொழுது தனியாக ஆறு, ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளில் குளிப்பதற்கு அனுமதிக்க வேண்டாம் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் ஒவ்வொரு பெற்றோரும் தங்களது பெண் பிள்ளைகளுக்கு மன வலிமை உண்டாக்கும் வகையிலும் அவர்களின் பிரச்சினைகளை தைரியமாக எதிர்த்து போராடும் வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். மேலும் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்த விழிப்புணர்வை கட்டாயம் ஏற்படுத்த வேண்டும், என்றனர். நிகழ்ச்சியின் முடிவில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.


Next Story