மாணவர்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு
மாணவர்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு போதை மற்றும் மது ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்பேரில் தா.பழூர் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் பங்கேற்று, பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருட்கள் மற்றும் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். அப்போது மாணவர்கள் போதைப் பழக்கங்களுக்கு உள்ளாகும் சூழ்நிலை குறித்தும், அதனை தவிர்த்து அதில் இருந்து விடுபடுவது குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது. மேலும் நம்மைச்சுற்றி நடக்கும் நல்ல விஷயங்களை எடுத்துக்கொண்டு, கெட்ட விஷயங்களை கண்டும் காணாமல் இருந்து விட வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. எந்த நிலையிலும் போதைப் பொருட்கள் புத்திசாலித்தனத்தையும், அறிவாற்றலையும் வளர்க்காது என்றும், சிறிது சிறிதாக பழக்கத்திற்கு ஆளாகும் நபர்களை இழிவான நிலைக்கு தள்ளிவிடும் என்றும், மேலும் கடுமையான உடல் நலக் கோளாறுகள் ஏற்பட்டு நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்து விரைவில் உயிரிழக்க நேரிடும் என்றும், மாணவர்களுக்கு போதை பழக்கங்களின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காந்திமதி உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.