செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை தி.மு.க.வினருக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது-அண்ணாமலை பரபரப்பு பேச்சு
செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை தி.மு.க .வினருக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
சாதனை விளக்க பொதுக்கூட்டம்
மத்திய பா.ஜனதா அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு அரியலூர் மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் கருப்பு எம்.முருகானந்தம், மாவட்ட பொதுச்செயலாளர் அருண்பிரசாத், மாநில பொதுக்குழு உறுப்பினர் நடராஜன், வக்கீல் பிரிவு மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசும்போது கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு கடந்த 9 ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உலக அரங்கில் இந்தியா பொருளாதார ரீதியாக 11-வது நிலையில் இருந்து 5-வது பெரிய நாடாக விளங்குகிறது. பருப்பு உற்பத்தியில் இந்தியா முதல் நாடாக மாறி இருக்கிறது. 3-வது இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.
கொரோனா தடுப்பூசி
அரியலூர் மாவட்டத்தில் பிரதமர் வீடு திட்டத்தின் கீழ் 14 ஆயிரத்து 26 பேருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்திற்கு வழங்கப்படக் கூடிய மானியம் வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்பட்டுள்ளது. முத்ரா கடன் ரூ.1,512 கோடி அரியலூர் மாவட்டத்தில் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 2 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.
பப்புவா நியூ கினியா நாட்டில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு யாருக்கும் ராணுவ அணிவகுப்பு தர மாட்டார்கள். ஆனால் இந்திய பிரதமர் அங்கு சென்றபோது அவருக்கு மாலை 6 மணிக்கு மேல் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு இருந்தபோது அந்தந்த நாட்டில் தயாரான கொரோனா தடுப்பூசிகள் அந்தந்த நாட்டில் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. ஆனால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் உலகின் 120 நாடுகளுக்கு வழங்கப்பட்டன. எங்கள் நாட்டிற்கும் அங்கிருந்து கிடைத்தது என்று கூறி அந்த நாட்டின் பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட வகையில் நன்றி தெரிவித்தார்.
செங்கோல்
புதிய பாராளுமன்ற வளாகத்தில் சோழர்களின் கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் சோழர்களின் செங்கோல் நிறுவப்பட்டது. இது தமிழர்களுக்கு பிரதமர் வழங்கிய மரியாதை. ஆனால் இதனை எதிர்த்து பேசுகிறார் இந்த தொகுதியின் எம்.பி. திருமாவளவன். இது சனாதன தர்மத்தின் அடையாளம் என்று கூறுகிறார். அவருக்கு ஒன்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். செங்கோல் என்கிற வார்த்தை முதல் முதலில் உச்சரிக்கப்பட்ட காலத்தில் மதங்கள் என்ற ஒன்று இந்த நாட்டில் இல்லை.
அரியலூர் மாவட்டத்தில் திராவிட ஆட்சியில் பின் தங்கிய மாவட்டமாக தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக கடந்த 75 ஆண்டு காலமாக எந்த திராவிட அரசும் செயல்படவில்லை. அரியலூர் மாவட்டத்தில் இல்லாத வளமே இல்லை. ஒவ்வொரு முறையும் தி.மு.க., அ.தி.மு.க. அரசுகள் பொய் சொல்லி வாக்கு கேட்டு வெற்றி பெறுகின்றனர். 2024-ம் ஆண்டில் பா.ஜனதா 400 எம்.பி.க்களுடன் ஆட்சி அமைக்கும்.
'நீட்' தேர்வு
இந்த ஆண்டு நடைபெற்ற 'நீட்' தேர்வில் தமிழக மாணவர்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளார்கள். அகில இந்திய அளவில் தமிழகத்தை சேர்ந்த பிரபஞ்சன் முதல் 'ரேங்க்' பெற்றுள்ளார். முதல் 10 இடங்களில் 4 இடங்களை தமிழக மாணவர்கள் பெற்றுள்ளார்கள். அனிதா துரதிஷ்டவசமாக தனது உயிரை மாய்த்துக் கொண்ட சூழலை மறக்க முடியாது. தற்போது தமிழகத்தினுடைய நீட் வெற்றி அனிதாவின் ஆன்மாவிற்கு நிச்சயம் சாந்தி கிடைக்கும். கிராமப்புற மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள் 'நீட்' தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.
தமிழகத்திலும் ஒரு அமைச்சர் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது மு.க.ஸ்டாலின் குளித்தலை பொதுக்கூட்டத்தில் செந்தில் பாலாஜியை மிகக் கடுமையாக விமர்சித்தார். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அதே மு.க.ஸ்டாலின் செந்தில் பாலாஜியை மகாத்மா காந்தி என்று அழைக்கிறார்.
தேர்தல் வாக்குறுதிகள்
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு ஆஸ்பத்திரியில் இருக்கிறார். இதனால் தி.மு.க.வில் அனைவருக்குமே ஒரு நடுக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் அனைவரும் நள்ளிரவு 2 மணிக்கு செந்தில் பாலாஜியை பார்த்ததற்கு காரணம் அவர்களை காட்டிக் கொடுத்து விடக்கூடாது என்பதற்காகத்தான். காலையில் செந்தில் பாலாஜி நடை பயிச்சி செய்து கொண்டிருக்கிறார். இரவு நெஞ்சுவலி என்கிறார். இந்த நாடகங்களை தமிழ்நாடு இன்னும் எத்தனை காலத்துக்கு பார்க்க போகிறது.
5 கட்சி மாறிய செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை விசாரணைக்கு பிறகு 6-வது கட்சிக்கும் போவதற்கான வாய்ப்பு உள்ளது. தி.மு.க.வின் 512 தேர்தல் வாக்குறுதிகளில் அரியலூர் மாவட்டத்திற்கு மட்டும் 20 தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்ட நிலையில் 2 ஆண்டுகள் கடந்த பின்பும் அவற்றில் ஒன்றுகூட நிறைவேற்றப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாநில நிர்வாகி அணைகுடம் இளையராஜா, மருத்துவ அணி மாவட்ட தலைவர் பரமேஸ்வரி ஆனந்த்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.