செந்தில் பாலாஜியை காவலில் எடுக்கக் கோரிய அமலாக்கத்துறையின் மனு - தீர்ப்பு ஒத்திவைப்பு
அமலாக்கத்துறையின் மனு மீது சற்று நேரத்திற்குப் பிறகு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
சென்னை,
செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான உத்தரவு வந்த உடன், செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு மற்றும் அமலாக்கப்பிரிவு சார்பில் செந்தில் பாலாஜிக்கு 15 நாட்கள் காவல் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு ஆகிய 2 மனுக்கள் மீது விசாரணை நடைபெறும் என முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஆட்கொணர்வு மனு மீது சற்று நேரத்திற்கு முன்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய அமலாக்கத்துறையின் மனு மீது விசாரணை தொடங்கியது. இந்த விசாரணைக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில் பாலாஜி காணொலி காட்சி மூலம் ஆஜரானார்.
இந்த விசாரணையின் இரு தரப்பு வாதங்களும் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், செந்தில் பாலாஜியை காவலில் எடுக்கக் கோரிய அமலாக்கத்துறையின் மனு மீதான தீர்ப்பை நீதிபதி சற்று நேரத்திற்கு ஒத்திவைத்துள்ளார். சென்னை ஐகோர்ட்டின் உத்தரவு நகல் கிடைத்த பிறகு இந்த அமலாக்கத்துறையின் மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இன்னும் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.