செந்தில்பாலாஜி வழக்கு - ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு விசாரணை இன்று நடைபெற்றது.
சென்னை,
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் நிஷாபானு, பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணை இன்று நடைபெற்றது.
அப்போது செந்தில்பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவன் ஆஜராகி வாதங்களை முன்வைத்து வருகிறார். அதில், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது, அரசியலமைப்பு சட்டம் வழங்கிய உரிமைகளுக்கு விரோதமானது.கைது தொடர்பாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததாகவும் அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது;
சம்மனை கையெழுத்து போட்டு பெற்றுக் கொள்ள செந்தில் பாலாஜி மறுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளது. கைது மெமோவில் கையெழுத்திட செந்தில் பாலாஜி மறுத்தார் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது?. இதுசம்பந்தமான ஆவணங்கள் ஜூன் 16ம் தேதி தான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நீதிமன்ற காவலில் வைக்கும்போது, இதையெல்லாம் முதன்மை அமர்வு நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை.
கஸ்டம்ஸ் சட்டம், ஜிஎஸ்டி சட்டம், என்.டி.பி.எஸ் சட்டங்களில் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், அமலாக்கத்துறைக்கு நாடாளுமன்றம் அப்படி எந்த அதிகாரத்தையும் வழங்கவில்லை. நாடாளுமன்றமே வழங்காத ஒரு அதிகாரத்தை நீதிமன்றம் வழங்க முடியாது. சட்டவிரோத கைது என்பதை மனதில் கொள்ளாமல் முதன்மை அமர்வு நீதிபதி, நீதிமன்ற காவல் வழங்கியுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளது. இயந்திரதனமாக காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவன் வாதங்களை முன்வைத்தார்.
அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதங்களை முன்வைத்தார் . அதில் "செந்தில்பாலாஜியின் கைதை சட்டவிரோதம் எனக்கூற முடியாது. நீதிமன்ற காவல் ஆணை பிறப்பிக்கும் முன் ஆட்கொணர்வு மனு தாக்கலானதால் கைது சட்டவிரோதம் இல்லை. நீதிமன்ற காவலில் வைக்க கோரிய மனு 24 மணி நேரத்திற்குள் தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றமே உத்தரவு பிறப்பித்துள்ளதால், செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இல்லை என்பது நிரூபணம் ஆகிறது.
நீதிமன்றக் காவலில் வைக்க ஆஜர்படுத்தும்போது, அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரலாம். நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை எதிர்த்தும் வழக்கு தொடரப்படவில்லை. நீதிமன்ற காவல் உத்தரவை எதிர்த்து ஆட்கொணர்வு வழக்கு தொடர முடியாது.
செந்தில் பாலாஜி வேலைக்கு பணம் பெற்றார் என்பதற்கான ஆதாரம் உள்ளது. அதன் அடிப்படையில் தான் அவர் கைது செய்யப்பட்டார். செந்தில்பாலாஜி நீதிமன்ற காவலில் தான் இருக்கிறார்; அமலாக்கத்துறை காவலில் இல்லை. செந்தில்பாலாஜியை ஆஜர்படுத்தி விடுவிக்கும்படி தற்போது கோர முடியாது.
காவலில் வைத்து விசாரிப்பது அமலாக்கத்துறையின் உரிமை;காவலில் வைத்து விசாரிக்க 8 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டது;செந்தில் பாலாஜியிடம் விசாரிக்க முடியாத காரணத்தால், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருதக் கூடாது"என வாதிடப்பட்டது.
இந்த நிலையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.