ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தனி செயலி : சீமான் வலியுறுத்தல்


ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தனி செயலி : சீமான் வலியுறுத்தல்
x

ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துவதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆட்டோ (தானி) வாகன ஓட்டுநர்கள் எரிபொருள், மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுப் போதிய வருமானமின்றித் தவித்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. மாநகரங்களில் முன்பதிவு செயலி மூலம் தானி ஓட்டுநர்களின் உழைப்பினைச் சுரண்டும் தனியார் பெருநிறுவனங்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தாது வேடிக்கைப் பார்க்கும் தமிழ்நாடு அரசின் மெத்தனப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழ்நாடு அரசு கடந்த 2013-ம் ஆண்டுத் தானி (ஆட்டோ) வாகனங்களுக்கான பயண கட்டணத்தை 1.8 கி.மீ தூரத்துக்கு ரூ.25, அடுத்துவரும் ஒவ்வொரு கி.மீக்கும் தலா ரூ.12, காத்திருப்புக் கட்டணம் 5 நிமிடத்துக்கு ரூ.3.50 எனவும் நிர்ணயித்து உத்தரவு பிறப்பித்தது. அன்றைய காலகட்டத்தில் எரிபொருள் விலையானது பெட்ரோல் ரூ.60, டீசல் ரூ.45 என்ற அளவில் இருந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் எரிபொருட்களின் விலை இருமடங்கு அளவிற்கு உயர்ந்து தற்போது ரூபாய் 100ஐ கடந்துள்ளது. அதுமட்டுமின்றி, காற்று மாசினைக் கட்டுப்படுத்தும் வகையில், 75 விழுக்காட்டிற்கும் அதிகமான ஆட்டோகள் எரிகாற்றில் இயங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், எரிகாற்று விலையும் வாங்க முடியாத அளவிற்கு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

மேலும், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால் ஆட்டோ வாகனங்களுக்கான கட்டணம் மட்டும் 10 ஆண்டுகளாக எவ்வித மாறுதலும் இல்லாமல் பழைய கட்டண அளவிலேயே உள்ள காரணத்தினால் ஆட்டோ ஓட்டுநர்கள் போதிய வருமானம் கிடைக்காமல் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதோடு, அவர்களது குடும்பங்கள் வறுமையில் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஆட்டோகளுக்கான தரச்சான்றிதழ் மற்றும் காப்பீடு தொகையையும் கட்டுக்குள் வைத்திருக்க தமிழ்நாடு அரசு தவறிவிட்டது. மேலும், 'ஆட்டோகளுக்கான பயண கட்டணத்தை எரிபொருள் விலைக்கேற்ப நிர்ணயிக்க வேண்டும்' என்ற உயர் நீதிமன்ற அறிவுறுத்தலையும் தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்பது தானி ஓட்டுநர்களின் வயிற்றில் அடிக்கும் கொடுஞ்செயலாகும். மேலும், ஆட்டோ வாகன சேவையை முழுமையாக ஆக்கிரமித்து, ஆட்டோ ஓட்டுநர்களின் உழைப்பினை சுரண்டி கொழுக்கும் தனியார் பெருநிறுவனங்களின் ஆதிக்கத்தை தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்த தவறியதால், சுயமாக தொழில் புரியும் ஆட்டோ ஓட்டுநர்கள், ஆட்டோஓட்டும் தொழிலை விட்டே அகல வேண்டிய அவலமான சூழல் நிலவுகிறது. அதே நேரத்தில் கட்டண உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் காக்க வேண்டியது அரசின் பொறுப்பும், கடமையுமாகும்.

ஆகவே, தமிழ்நாடு அரசு ஆட்டோ சேவையில் தனியார் பெருநிறுவனங்களின் மேலாதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், கேரள மாநில அரசு செய்துள்ளதுபோல அரசு சார்பில் குறைந்த பிடித்த தொகையில் 'ஆட்டோ சேவைக்கான முன்பதிவு செயலியை' உருவாக்கி ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துவதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story