மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தனி கவனம் செலுத்தப்படும்-போலீஸ் துணை கமிஷனர் அன்பு பேட்டி
திருச்சி, ஜூன்.14-
திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தனி கவனம் செலுத்தப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் துணை கமிஷனர் அன்பு கூறினார்.
போலீஸ் துணை கமிஷனர் பொறுப்பேற்பு
திருச்சி மாநகர வடக்கு மற்றும் தெற்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர்களாக பதவி வகித்து வந்த சக்திவேல், முத்தரசு ஆகியோர் சமீபத்தில் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து வடக்கு போலீஸ் துணை கமிஷனராக அன்பு, தெற்கு போலீஸ் துணை கமிஷனராக ஸ்ரீதேவி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் போலீஸ் துணை கமிஷனர் (வடக்கு) அன்பு நேற்று காலை மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதையடுத்து அவர் காந்திமார்க்கெட்டில் உள்ள தனது அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு போலீஸ் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
போக்குவரத்து நெரிசல்
இதையடுத்து போலீஸ் துணை கமிஷனர் அன்பு கூறுகையில், திருச்சி மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்க ரோந்து பணி அதிகப்படுத்தப்படும். தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்படும். போக்குவரத்து நெரிசலை குறைக்க போக்குவரத்து போலீசாருடன் கலந்து ஆலோசித்து தனி கவனம் செலுத்தப்படும். ரவுடிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்தவும், குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்தவும் தனிப்படை அமைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
போலீஸ் துணை கமிஷனர் அன்பு தர்மபுரி மாவட்டத்தை சோந்தவர். இவர் கடந்த 2009-ம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்தார். வேலூர், சிவகங்கை, நாகப்பட்டினம், சேலம், கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி உள்ளார். கடைசியாக சிவகங்கை மாவட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி பதவி உயர்வு பெற்று திருச்சிக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.