கஞ்சா வழக்குகளை விசாரிக்க தனி அலுவலர்களை நியமிக்க வேண்டும்


கஞ்சா வழக்குகளை விசாரிக்க தனி அலுவலர்களை நியமிக்க வேண்டும்
x
தினத்தந்தி 8 April 2023 12:15 AM IST (Updated: 8 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கஞ்சா வழக்குகளை விசாரிக்க தனி அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறினார்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் எம்.ஜி.சாலையில் கடந்த 29-ந் தேதி மாலை பல்பொருள் அங்காடி ஊழியர் இப்ராஹிம் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட விழுப்புரம் வரதப்பன் நாயக்கன்தோப்பு பகுதியை சேர்ந்த ஞானசேகர் மகன்கள் ராஜசேகர் (33), வல்லரசு (23) ஆகிய இருவரையும் விழுப்புரம் மேற்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, விழுப்புரம் வடக்கு தெருவில் உள்ள இப்ராஹிமின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து, வணிகர்கள் சார்பில் நிவாரண உதவியாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்தை இப்ராஹிமின் குடும்பத்தினருக்கு வழங்கினார்.

தனி அலுவலர்களை நியமிக்க...

அதன் பின்னர் விக்கிரமராஜா, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், கத்தியால் குத்தப்பட்ட நிலையில் இருந்த இப்ராஹிமுக்கு உதவிபுரிந்த 2 ஆட்டோ டிரைவர்களுக்கு ஊக்கத்தொகையாக தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. கஞ்சா வழக்குகளில் கைதானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். கஞ்சா விவகாரத்தில் போலீசார், சற்று ஒதுங்குவதாக மக்கள் எண்ணுகிறார்கள். காவல்துறைக்கு, தமிழகத்தில் உள்ள வணிகர்கள் எப்போதும் பக்கப்பலமாக இருப்பார்கள். கஞ்சா வழக்குகளை விசாரிக்க தனி அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்றார்.

அப்போது வணிகர் சங்க நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், பிரேம்நாத், அக்பர்அலி, யாசின் மவுலானா, சுப்பிரமணி, முபாரக்அலி, அகிலன், சுதர்சனம், பன்னீர்செல்வம் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story