மருத்துவ காப்பீடு உள்ளிட்ட விவரங்களை அறிய விரைவில் தனி இணையம்


மருத்துவ காப்பீடு உள்ளிட்ட விவரங்களை அறிய விரைவில் தனி இணையம்
x

ஓய்வூதியதாரர்கள் சமர்ப்பித்துள்ள மருத்துவ காப்பீடு உள்ளிட்ட விவரங்களை அறிய விரைவில் தனி இணையம் தொடங்கப்பட இருப்பதாக ஓய்வூதிய இயக்குனர் ஸ்ரீதர் தெரிவித்தார்.

திருப்பத்தூர்

குறை தீர்வு கூட்டம்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். அரசு கூடுதல் செயலரும், நிதித்துறை மற்றும் ஓய்வூதிய இயக்குனருமான ஸ்ரீதர் கலந்து கொண்டு ஓய்வூதியதாரர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

தனி இணையம்

ஓய்வூதியதாரர்கள் சமர்ப்பித்துள்ள மருத்துவ காப்பீடு மற்றும் இதர விவரங்களை அறிய தமிழ்நாடு அரசின் சார்பில் விரைவில் தனி இணையம் மற்றும் செயலி தொடங்கப்பட உள்ளது. மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை மற்றும் அறுவைசிகிச்சை செய்துகொள்ளும் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 20 படுக்கை அறைகள் ஒதுக்க கோரிய மனு அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

வருடத்திற்கு ஒருமுறை அரசு கூடுதல் செயலாளர் நிதித்துறை மற்றும் ஓய்வூதிய இயக்குனர் தலைமையில் மாவட்டம் வாரியாக ஓய்வூதியர் குறைதீர்வு கூட்டம் நடத்தப்படும். காலாண்டுக்கு ஒருமுறை மாவட்ட கருவூல அலுவலர் தலைமையில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம் இனி தொடர்ந்து நடத்தப்படும்.

மருத்துவ காப்பீடு

புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் அரசாணையில் குறிப்பிட்டுள்ள மருத்துவமனையில் மருத்துவ காப்பீடு அட்டையை மட்டும் பயன்படுத்தி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் அரசாணையில் குறிப்பிடப்படாத மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்தால் அரசாணையில் குறிப்பிட்டுள்ள மருத்துவமனையில் அறுவைசிகிச்சைக்காக ஆகும் செலவில் 75 சதவீதம் மட்டும் திரும்ப பெறலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வில்சன் ராஜசேகர்,சுதா, மாவட்ட கருவூல அலுவலர் சித்ரகலா, உதவி இயக்குனர் (நிலஅளவை) செந்தில்குமார், மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் முருகேசன் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள், ஓய்வூதிய சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story