மாவட்டத்தில் 'மங்கி' குல்லா கொள்ளையர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை - பொதுமக்கள் வலியுறுத்தல்


மாவட்டத்தில் மங்கி குல்லா கொள்ளையர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை - பொதுமக்கள் வலியுறுத்தல்
x

மதுரை மாவட்டத்தில் ‘மங்கி’ குல்லா-டவுசர் கொள்ளையர்களை போலீசார் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தினர்.

மதுரை


மதுரை மாவட்டத்தில் 'மங்கி' குல்லா-டவுசர் கொள்ளையர்களை போலீசார் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தினர்.

'மங்கி' குல்லா-டவுசர்

மதுரை மாநகரை ஒட்டிய பகுதிகள் விரிவாக்கப்பட்ட பகுதியாக மாறிவருவதால் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மாநகர பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து விரிவாக்க பகுதிகளில் வீடு கட்டி குடியேறி வருகின்றனர். இதற்கிடையே, மதுரை மாவட்டத்தில் தற்போது புதிதாக மங்கி குல்லா கொள்ளையர்கள் உலா வருகின்றனர். மங்கி குல்லா மற்றும் டவுசர் அணிந்து வரும் இந்த கொள்ளையர்கள் ஒவ்வொரு பகுதியாக வேவு பார்த்து, ஆள்நடமாட்டம் குறைந்த பகுதிகளில் தங்களது கைவரிசையை காட்டுகின்றனர்.

ஏற்கனவே மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இவர்கள் கொள்ளையடித்ததுடன், ஆயுதங்களால் குடியிருப்போரை கொலைவெறி தாக்குதலும் நடத்தியுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் பொதும்பு சங்கையா நகர் பகுதியில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற போது பொதுமக்களின் எச்சரிக்கை உணர்வால் மயிரிழையில் தப்பினர். இவர்களது இலக்கு என்பது பகல் நேரத்தில் மக்களுடன் மக்களாக வேவு பார்த்து தெருக்களில் உள்ள வீடுகளை டார்கெட் செய்து நள்ளிரவில் களமிறங்குகின்றனர்.

தெருக்குள் வரும் மங்கி குல்லா-டவுசர் கொள்ளையர்கள் வீடுகளில் உள்ள கண்காணிப்பு கேமராவை உடைக்கின்றனர். பின்னர் ஆளில்லாத வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே சென்று நகை, பணத்தை கொள்ளையடிக்கின்றனர். அவர்கள் செல்லும் வீட்டுக்குள் அவர்களின் கணிப்பு தவறி ஆட்கள் இருந்து விட்டால் அவர்களை ஆயுதங்களால் கடுமையாக தாக்குகின்றனர். ஒருவேளை அவர்கள் ஏதாவது வீட்டுக்குள் நுழையும் போது யாராவது பார்த்து சத்தம் போட்டால், கையில் கொண்டு வரும் கற்களால் அவர்களை சரமாரியாக தாக்குகின்றனர்.

தொடர் கொள்ளை

அதாவது, இவர்கள் தனியாக கொள்ளையடிக்க வருவதில்லை. 3 முதல் 4 நபர்கள் வரை கூட்டாக வருவதாகவும் கூறப்படுகிறது. மாவட்டம் முழுவதும் கடந்த 15 தினங்களில் 10-க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பொதுமக்கள் இரவு நேரங்களில் ஒருவித அச்சத்துடன் தங்களது பொழுதை கழித்து வருகின்றனர். இந்தநிலையில், கடந்த 18-ந் தேதி அச்சம்பத்து சாய்கார்டன் பகுதியில் குல்லா கொள்ளையர்கள் வீடு புகுந்து கொள்ளையடித்த சம்பவம் மறுபடியும் அரங்கேறியுள்ளது.

அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளில் பதிவாகியுள்ளது. அத்துடன் அதே பகுதியில் கவின்கார்டன் தெருவில் குடியிருந்து வரும் ஒருவரின் வீட்டில் அவரது பின்பக்க கதவை உடைத்து 28 பவுன் தங்க நகை மற்றும் ரூ.11 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தன்று வீட்டில் குடியிருந்து வருபவர் வெளியூர் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

நடவடிக்கை

இந்த சம்பவம் குறித்து நாகமலைபுதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. கண்காணிப்பு. கேமராக்களை உடைத்து அந்த வீட்டுக்குள் தைரியமாக புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வரும் குல்லா கொள்ளையர்களின் நடமாட்டத்தை ஆரம்ப நிலையிலேயே தடுக்க வேண்டும் என்றும், அவர்களை சுட்டுப்பிடிக்கவும் தயங்க கூடாது என்றும் பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இல்லையென்றால் வடிவேலு காமெடி போல 100-வது கொள்ளை என்று போஸ்டர் அடிக்க வேண்டிய நிலை வந்துவிடும் என்கின்றனர்.

மேலும் சம்பவத்தில் ஈடுபடும் கொள்ளையர்கள் சமூகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறினர். கண்காணிப்பு பதிவுகளின்படி, அனைவரும் 30 வயதுக்குள் இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர். எனவே, இனியும் தாமதிக்காமல் இந்த கொள்ளையர்களை பிடிப்பதற்கான நடவடிக்கையை மாநகர மற்றும் மாவட்ட போலீசார் எடுத்து, மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இல்லையெனில், பொதுமக்களே தங்களை காத்துக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.


Next Story