நடிகை பார்வதி நாயர் புகாரின் பேரில் வேலைக்காரர் அதிரடி கைது


நடிகை பார்வதி நாயர் புகாரின் பேரில் வேலைக்காரர் அதிரடி கைது
x

நடிகை பார்வதி நாயரின் புகாரின் பேரில் கொலை மிரட்டல் வழக்கில் அவரது வீட்டு வேலைக்காரர் அதிரடியாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை,

'உத்தம வில்லன்', 'என்னை அறிந்தால்' போன்ற தமிழ்ப் படங்களில் நடித்தவர் நடிகை பார்வதி நாயர். கேரளாவைச் சேர்ந்த இவர் சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வருகிறார். இவருடைய வீட்டில் கடந்த அக்டோபர் மாதம் திருட்டு போய்விட்டது. விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள், லேப்-டாப் போன்றவை திருட்டு போய்விட்டதாகவும், வீட்டு வேலைக்காரர் சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்டோர் மீது சந்தேகம் இருப்பதாகவும் பார்வதி நாயர் நுங்கம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார்.

அதையொட்டி வீட்டு வேலைக்காரர் உள்ளிட்ட 5 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். வேலைக்காரர் சுபாஷ் சந்திரபோசும் நடிகை பார்வதி நாயர் மீது தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்திலும், போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் கொடுத்தார்.

2-வது புகார்-கொலை மிரட்டல் வழக்கு

இதற்கிடையில் சமீபத்தில், வேலைக்காரர் சுபாஷ் சந்திரபோஸ் மீது நடிகை பார்வதி நாயர் மீண்டும் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், தனது புகழை கெடுக்கும்வகையில் தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன என்றும், தனக்கு செல்போன் மூலம் கொலை மிரட்டல் வருவதாகவும், அதற்கு காரணம் சுபாஷ் சந்திரபோஸ்தான் என்றும் குறிப்பிட்டு இருந்தார். அந்த புகார் அடிப்படையில் சுபாஷ் சந்திரபோஸ் மீது நுங்கம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேட்டு 2-வது வழக்கு ஒன்றை பதிவு செய்தார். தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 சட்டப்பிரிவுகளின் கீழ் புதிய வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டது.

அதிரடி கைது-சிறையில் அடைப்பு

இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு புதுக்கோட்டையில் வைத்து சுபாஷ் சந்திரபோஸ் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் உடனடியாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். நேற்று அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story