5 ஆயிரம் ஏக்கர் எள் பயிர்கள் பாதிப்பு


5 ஆயிரம் ஏக்கர் எள் பயிர்கள் பாதிப்பு
x
தினத்தந்தி 4 May 2023 12:45 AM IST (Updated: 4 May 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யத்தில் பெய்த கோடை மழை காரணமாக 5 ஆயிரம் ஏக்கர் எள் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் பெய்த கோடை மழை காரணமாக 5 ஆயிரம் ஏக்கர் எள் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

கோடை மழை

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆதனூர், பன்னாள், கருப்பம்புலம், நெய்விளக்கு, குரவப்புலம், தென்னம்புலம், கரியாப்பட்டினம், செம்போடை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சம்பா அறுவடைக்குப்பிறகு கோடைகாலத்தையொட்டி எள் பயிரிடப்பட்டு இருந்தது.

இந்த பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில் எள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. உரத்துக்கான செலவு குறைவு, தண்ணீர் ேதவை குறைவு, பராமரிப்பு வேலை குறைவு உள்ளிட்ட காரணங்களாலும், குறைந்த நாளில் அதிக முதலீடு இல்லாமல் நிறைவான லாபம் தரும் பயிர் என்பதாலும் விவசாயிகள் நம்பிக்கையுடன் எள் சாகுபடியை மேற்கொண்டு இருந்தனர்.

கூடுதல் வருமானம்

நெல்லுக்கு பிறகு கூடுதல் வருமானம் தரும் பயிராக எள் இருந்து வருகிறது. இந்த ஆண்டு வேதாரண்யம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட எள் பயிர் தற்போது நன்றாக வளர்ந்து, பூத்து, காய்த்து இருந்தது. இந்த நிலையில் வேதாரண்யம் பகுதியில் கோடை மழை கடந்த 10 நாட்களாக விட்டு விட்டு பெய்து வருகிறது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதனால் வயல்களில் நீர் தேங்கி எள் செடிகள் அழுகி சாய்ந்து விட்டது. பல இடங்களில் எள் செடிகளின் காய்ப்பு தன்மையும் குறைந்து விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

மழையால் பாதிப்பு

கூடுதல் லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து எள் சாகுபடி செய்து இருந்த நிலையில் மழையால் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

சம்பா சாகுபடிக்கு பிறகு செலவில்லாமல் எள் பயிரிடுவோம். இதன் மூலம் அதிக வருமானம் கிடைக்கும். இந்த ஆண்டு கோடை மழையால் எள் சாகுபடியில் வருமானம் கிடைப்பது கேள்விக்குறியாகி விட்டது.

கடந்த ஆண்டு எள் ஒரு கிலோ 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு நல்ல மகசூல் கிடைத்து விற்பனையாகும் என்று எதிர்பார்த்தோம். மழையால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தமிழகஅரசு உரிய கணக்கெடுப்பு செய்து நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.


Next Story