மாற்றுத்திறனாளிகளுக்கான அமர்வு கைப்பந்து போட்டி; போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்


மாற்றுத்திறனாளிகளுக்கான அமர்வு கைப்பந்து போட்டி; போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 29 May 2023 12:15 AM IST (Updated: 29 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான அமர்வு கைப்பந்து போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான அமர்வு கைப்பந்து போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தொடங்கி வைத்தார்.

கைப்பந்து போட்டி

தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு சங்கத்தின் 10-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மச்சாதுநகர் பகுதியில் உள்ள கேம்ஸ்வில் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் வைத்து மாற்று திறனாளிகளுக்கான மாநில அளவிலான அமர்வு கைப்பந்து போட்டி நேற்று நடந்தது.

இதில் தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, தேனி உள்ளிட்ட 16 மாவட்டங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டு விளையாடின. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

நேர்மறை எண்ணம்

அப்போது அவர் பேசுகையில், விளையாட்டில் ஜெயிக்கலாம், தோற்கலாம். ஆனால் அதில் ஈடுபாட்டுடன் விளையாடுவதே முக்கியம். நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் மனமகிழ்ச்சியோடு நேர்மறையான சிந்தனைகளுடன் இருக்க வேண்டும். மேலும் கடின உழைப்புக்கு ஈடு இணையே இல்லை. எப்போதும் எதிர்மறையான எண்ணங்களை தவிர்த்து நேர்மறையான எண்ணங்களுடன் இருக்க வேண்டும். வெற்றி என்பது பணம், பதவி கிடையாது, அவைகளைத் தாண்டி உங்கள் திறமையை வெளி உலகத்துக்கு காட்டி தன்னம்பிக்கைக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். சிறப்பு திறனாளிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விளையாட்டுப் போட்டியை ஏற்பாடு செய்தவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் துரை என்.பாண்டியன், கேம்ஸ்வில் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் தாஸ், தூத்துக்குடி மாவட்ட மாற்று திறனாளிகள் விளையாட்டு சங்கத்தின் தலைவர் யோகீஸ், செயலாளர் வெற்றி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story