கடம்பூர் அருகே தோட்டத்தில் அமைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி பலி


கடம்பூர் அருகே  தோட்டத்தில் அமைத்த  மின்வேலியில் சிக்கி விவசாயி பலி
x

மின்வேலியில் சிக்கி விவசாயி பலி

ஈரோடு

கடம்பூர் அருகே தோட்டத்தில் அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

விவசாயி

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையத்தை அடுத்த கடம்பூர் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை அடிக்கடி வனப்பகுதியையொட்டி உள்ள தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

எனவே வனவிலங்குகளிடம் இருந்து பயிரை காப்பதற்காக கடம்பூர் அருகே ஒரு தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் சிக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

மின்சாரம் தாக்கியது

பசுவனாபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 58). விவசாயி. இவருடைய தோட்டம் அந்த பகுதியில் உள்ளது. இங்கு அவர் 2 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார். வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்தாதிருக்க இவர் தனது தோட்டத்தை சுற்றிலும் மின்வேலி அமைத்து இருந்தார்.

வழக்கமாக மின்இணைப்பை துண்டித்துவிட்டு கிருஷ்ணன் தோட்டத்துக்குள் செல்வார். ஆனால் நேற்று காலை அவர் மின்இணைப்பை துண்டிக்காமல் தோட்டத்துக்கு சென்று வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக மின்வேலியை தொட்டுள்ளார். இதனால் அவர்மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

சாவு

இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள பசுவனாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு் கிருஷ்ணன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும், கடம்பூர் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த கிருஷ்ணனுக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் கிருஷ்ணனின் உடலை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.


Next Story