செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


செல்போன் கோபுரம் அமைக்க  பொதுமக்கள் எதிர்ப்பு
x

திருப்பத்தூர் அருகே செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் தா்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் தா்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மனுகொடுக்க வந்தனர்

திருப்பத்தூரை அடுத்த அச்சமங்கலம் கிராமம், மாக்கனூர் கூட்ரோடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். நுழைவுவாயில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது பொதுமக்கள் எங்கள் பகுதியில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடந்து நடந்து வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை. அதனால் கலெக்டரை பார்த்து மனுகொடுப்போம் என கூறினர். அப்போது போலீசார் அனைவரும் செல்லக்கூடாது. 6 பேர் மட்டும் சென்று கலெக்டரிடம் மனுகொடுக்கலாம் என கூறினர்.

தர்ணா போராட்டம்

இதனால் ஆவேசமடைந்த பெண்கள் கலெக்டரை சந்திக்கும் வரை நாங்கள் இங்கிருந்து செல்லமாட்டோம் என கூறி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் 5 பேர் கலெக்டரை சந்தித்து மனுகொடுக்க சென்றனர். அப்போது கலெக்டர் ஆய்வுக்கூட்டத்தில் இருந்ததால் மனுவை தாசில்தாரிடம் அளித்து விட்டு சென்றனர்.

பொதுமக்கள் அளித்துள்ள அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மாக்கனுர் கூட்டுரோடு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டால் பறவைகள், வீட்டு விலங்குகள், பெண்கள், குழந்தைகள் என பல தரப்பிலும் நுண்ணலையினால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இங்கு செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

பொதுமக்கள் சுமார் 4 மணி நேரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story